திமுக கூட்டணி குறித்து அவதூறு: திருச்சி எஸ்பி. அலுவலகத்தில் மாணிக்கம் எம்பி மீது திமுக ஐடி விங் நிர்வாகி புகார்
திமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் மீது திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக IT WING நிர்வாகி புகார்
திமுக தலைமை, அதன் கூட்டணிக் கொள்கைகள் மற்றும் நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பொய்யான அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் காங்கிரஸ் பிரமுகர் MP மாணிக்கம் தாக்கூர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப (IT) அணியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞருமான முரளிகிருஷ்ணன், திருச்சி மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த MP மாணிக்கம் தாகூர் என்பவர் திட்டமிட்டு அவதூறு கருத்துக்களைப் பேசியுள்ளார் .
அதில், “அதிமுக மற்றும் திமுக இணைந்து விரைவில் பாஜக-வுடன் கூட்டணி அமைக்க உள்ளது” என்று முற்றிலும் பொய்யான, கற்பனையான குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் பரப்பியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உண்மைக்கு மாறான, அரசியல் அவதூறுகளைச் சொற்பொழிவுகள் மற்றும் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பி வருகிறார்.
இதன் மூலம் திமுக தொண்டர்களிடையே குழப்பத்தையும், கலக மனநிலையையும் தூண்ட அவர் முயன்றுள்ளார். திமுக தொண்டர்களிடையே வன்முறையையும் வெறுப்புணர்வையும் தூண்டும் நோக்கில் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வரும் மாணிக்கம் தாகூர் , எவ்வித ஆதாரமும் இன்றி திமுக மற்றும் அதன் தலைவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்துப் பிரச்சாரம் செய்து வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிராகத் தவறான எண்ணத்தை உருவாக்க வழிவகை செய்கிறது.
மூன்று தலைமுறைகளாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வரும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், கழகத் தொண்டர்களுக்கும் இத்தகைய அவதூறு பரப்புரைகள் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்களிடையே அரசியல் பகைமை, கலகம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கில், திட்டமிட்டு அவதூறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பிய மாணிக்கம் தாகூர் மீது குற்றவியல் மற்றும் அவதூறு வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.