பொன்மலை ஜீ கார்னர் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
திருச்சி பிப்.12 திருச்சி பொன்மலை ஜீ கார்னர் பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக பழைய கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்து வருவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையோரம் எரிக்கப்பட்ட கழிவுகளால் அடர்ந்த புகை பரவி, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக வளைவு பகுதியில் புகை பரவியுள்ளதால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு,அப்பகுதியில் வாகனங்களில் செல்லும் மக்களின் உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவுகள் எரிப்பதை தடுக்கவும், முறையான கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்