சவர்மா இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை
திருச்சி, செப்.20 திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள சவர்மா இறைச்சி உணவு விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி 140 கெட்டு போன இறைச்சியையும் மற்றும் பழச்சாறு கடைகளில் அழுகிய பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு, சாலை ரோடு மற்றும் தில்லைநகர் பகுதியை சுற்றியுள்ள சவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் சுமார் 21 கடைகள் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ், செல்வராஜ், வசந்தன், இப்ராகிம், ரங்கநாதன், ஜஸ்டின், வடிவேல் மற்றும் அன்புச்செல்வன் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 21 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி மற்றும் சமைத்த அசைவ உணவுகள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் சுமார் 140 கிலோ வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், ஒன்பது கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில் 6 கடைகளுக்கு தலா 3000 வீதம் 18000 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது.
மேலும், ஆய்வின்போது தில்லைநகரிலுள்ள பிரபல பழச்சாறு (ஜூஸ்) கடையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது ஜூஸ் போட வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்து ஏற்கெனவே இதுபோன்று கண்டறியப்பட்டு அபராத தொகை போடப்பட்டிருந்ததால் தொடர் குற்றத்தின் அடிப்படையில் அந்த கடை சீல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் ஷவர்மா கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றையதினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் கோழி இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதி அருகில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 99449 59595, 95859 59595, 94440 42322 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.