முன்னாள் எம்.எல்.ஏ. கணவரின் செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்கள் 2 பேர் கைது
திருச்சி, மார்ச் 25 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு தத்தமங்கலத்தில் நேற்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முன்னாள் எம்எல்ஏ கணவரின் செல்போனை மோட்டார் பைக்கில் வந்து பறித்துச் சென்ற இரண்டு இளைஞர்களை சிறுகனூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தத்தமங்கலம் குடித் தெருவை சேர்ந்தவர் முருகன்(54) . இவர் முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் கணவர் ஆவார்.இவர் நேற்று காலையில் வடக்கு தத்தமங்கலம் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த இருவர் அவரிடம் இருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சடைந்த முருகன் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்ற நபர்களை விசாரணை செய்து தேடி வந்தனர். போலீசாரின் தேடுதல் வேட்டையில் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடியைச் சேர்ந்த ரோஹித் (19) மற்றும் கோகுல் (21) இருவரும் செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பறித்துச் சென்ற செல்போனை மீட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.முன்னாள் எம்எல்ஏ கணவரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.