லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி, மே 15 மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்குவதற்காக கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி (மேற்கு) கிராம, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பா.முரளீதரன் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி, அழகாப்பட்டி கீழப்பள்ளம் பி.ராமசாமி மகன் ஆர்.செல்லதுரை என்பவரிடம், அவரது தகப்பனார் மற்றும் பெரியப்பா பெயர்களில் கூட்டாக உள்ள நிலங்கள் பொருத்து மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்குவதற்காக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி (மேற்கு) கிராம, கிராம நிர்வாக அலுவலர் பா.முரளீதரன் என்பவர், கையூட்டாக ரூ.3,000/-ம் கேட்டது தொடர்பாக பா.முரளீதரன் என்பவர் மீது திருச்சி ஊ.த.க பிரிவு கு.எண்.30/2008, சட்டப்பிரிவு 7 ஊழல் தடுப்புச்சட்டம்-1988ன்படி கடந்த 17.11.2008ம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 17.11.2008ந்தேதி மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் செல்லதுரை என்பவரிடம் கையூட்டு பணம் ரூ.3,000/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி பா.முரளீதரன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று 15.05.2026ந்தேதி திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு , பா.முரளீதரன், எம்.புதுப்பட்டி(மேற்கு) முன்னாள் கிராம நிர்வாக அலுவலர், என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 2 வருடங்கள் தண்டனை, ரூ.10,000/- அபராத விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதங்கள் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்தும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 2 வருடங்கள் தண்டனை, ரூ.10,000/- அபராத விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதங்கள் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்தும், மேற்கண்ட தண்டனைகளை ஒருங்கிணைந்து ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கினை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு DSP மணிகண்டன், காவல் ஆய்வாளர் ஞா.சக்திவேல் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிகண்ணன் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்துள்ளார்கள்.