கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொடங்குப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மிகவும் பின் தங்கிய பகுதியில் உள்ள இப்பள்ளியில் பொடங்குப்பட்டி சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற போதிய வசதிகள் இல்லாதபட்சத்தில் மாணவர்களுக்கு மணப்பாறை அருகே எடத்தெருவில் உள்ள தனியார் பஞ்சாலை நிர்வாகம் மற்றும் மதுரையைச் சேர்ந்த பெட்கிராட் சுய தொழில் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட உள்ளது. ஒரு மாதம் நடைபெறும் பயிற்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர்.
பள்ளியில் நடைபெற்ற கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் தனியார் பஞ்சாலையின் ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேசன் அலுவலர் சுஜின் குத்துவிளக்கேற்றி, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பிற்கான கல்வி உபகரணங்களை வழங்கி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் மதுரை பெட்கிராட் பயிற்சி நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்புராம், தனியார் பஞ்சாலை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் நிறுவனத்தினர்களுக்கு பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.