“ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கிடைக்கும் சார்” காவிரி பாலத்தில் சூடுபிடிக்கும் ரெயின்கோட் வியாபாரம்!
வியர்வை கொட்ட சுட்டெரிக்கும் பல நாள் வெப்பத்தைத் தாங்கும் மனிதர்களால், சில நாட்கள் பெய்யும் மழையை தாங்க முடியவில்லை….!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் திடீரென கனமழை பெய்து வருகிறது.
இதில் தொடர்ந்து திருச்சியின் முக்கிய பகுதிகளான சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், டிவிஎஸ் டோல்கேட் பாலம், காவிரி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ரெயின்கோட் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. காவிரி படத்தில் 5 இடங்களில் சாலையோரமாக ரெயின்கோட் விற்பனை செய்து வருகின்றனர். காவிரி பாலத்தில் செல்லும் பல பொதுமக்கள் இந்த ரெயின்கோட்டை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து காவேரி பாலத்தில் ரயில் வியாபாரத்தில் இருந்த கிருஷ்ணாவிடம் பேசினோம்….”நாங்கள் அனைவரும் மேட்டூரிலிருந்து மொத்தமாக ரெயின்கோட்டுகள் எடுத்து வந்து விற்பனை செய்கிறோம். குறைந்த விலையில் ரெயின் கோட் 400 ரூபாய் முதல் விற்பனை செய்கிறோம். இதில் எங்களுக்கு ஒரு 50 ரூபாய் கிடைக்கிறது. தினந்தோறும் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை கிடைக்கிறது. மழைக்காலங்களில் மட்டும் தான் எங்களுக்கு வியாபாரம். தீபாவளி நேரத்தில் ரெயின்கோட் நன்றாக விற்பனையானது. தற்போது மந்தமாக தான் இருக்கிறது.” என்றார்