தமிழக அரசைக் கண்டித்து செப்.30-ல் உண்ணாவிரத போராட்டம் : தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு
திருச்சி, செப்.24 ஆட்சி மாற்றம் மிகப்பெரிய ஏமாற்றம்– தமிழக அரசைக் கண்டித்து செப். 30-ல் செவிலியர்கள் உண்ணாவிரதம்- திருச்சியில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு
தமிழக அரசு அறிவித்துள்ள 4,724 தற்காலிகச் செவிலியர் பணி நியமனத்தைக் கைவிடக் கோரி வரும் செப்டம்பர் 30-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் கலையரசி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலச் செயற்குழு முடிவின்படி தற்காலிகச் செவிலியர் பணி நியமனத்தைக் கைவிட வலியுறுத்தி தொடர் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 அரசு செவிலியர் மருத்துவக் கல்லூரிகளில் நிரந்தரமில்லாத பணி அமர்வு முறையைக் கைவிட வேண்டும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தகுதித் தேர்வு மூலமாக மட்டுமே செவிலியர்களை நிரந்தரப் பணியமர்த்த வேண்டும் என சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் கலையரசி கூறுகையில்…
சம வேலைக்குச் சம ஊதியம் தொடர்பான செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு அதனை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளில் தற்காலிகப் பணி நியமனம் மற்றும் மறுபகிர்வு முறையைக் கொண்டு வருவது செவிலியர் பற்றாக்குறையை ஒருபோதும் தீர்க்காது. மாறாக பணிப்பளுவை அதிகரித்து மருத்துவச் சேவையையே வெகுவாகப் பாதிக்கும்.எனவே தற்காலிகப் பணி நியமன முறையை முற்றிலும் கைவிட்டு MRB தகுதித் தேர்வு மூலம் செவிலியர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இதற்குத் தீர்வு காண வேண்டும். தவறும்பட்சத்தில், அடுத்தகட்டப் போராட்டமாக வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து மாநில அளவிலான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 30-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலச் செயற்குழு முடிவின்படி போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
குறிப்பாக தற்போது அமைந்துள்ள ஆட்சி மாற்றம் எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்..