ஸ்ரீரங்கம் கோவிலில் நுழையவிடாமல் தடுத்த சம்பவம்; திருச்சி காவல் ஆணையரிடம் புகார்

0 449
Stalin trichy visit

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
என் பெயர் ஜாகிர் உசேன். கடந்த 30 ஆண்டுகளாக ஒரு பரத நாட்டிய கலைஞனாகவும் வைணவ சொற்பொழிவாளராகவும் இருந்து வருகிறேன். இந்திய ஒன்றிய அரசின் ‘சமூக நல்லிணக்க விருது’, தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல விருதுகளால் கௌரப் படுத்தப்பட்டேன். தற்போதைய முதலமைச்சரால் ‘நாட்டியச் செல்வன்’ விருதினையும் பெற்றுள்ளேன். உலகம் முழுவதும் பல நாடுகளில் அழைக்கப்பட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம் அவர்களால் பல பட்டங்களை பெற்றுள்ளேன்.

பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும் வாழ்வால் ஒரு வைணவனாகவே வாழ்ந்து வரும் நான் பல வைணவ திருத்தலங்களின் திருப்பணிகளை செய்துள்ளேன் (தொகுப்பு தனியாக) நேற்று நண்பகல் அமைதியான முறையில் திருவரங்கம் அரங்கநாதரை தரிசிக்க கோவிலுக்குள் சென்ற என்னை அமெரிக்க அரசால் பாலியல் சீண்டல் குற்றத்திற்கு தண்டனை பெற்றவரும், தன்னை வைணவர் என சொல்லிக் கொள்ளும் ரங்கராஜன் நரசிம்மன் எனும் நபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு என் மத சாதி அடையாளத்தை கொச்சையாக தகாத சொற்களால் பேசி ஆலயத்திற்குள் நுழையவிடாமல் நெட்டித்தள்ளி வெளியேற்றப்பட்டேன்.

சம்பவம் நடந்த போது அங்கு பல பக்தர்கள் கோவில் நிர்வாகிகள் இருந்தனர். சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவிலும் பதிவாகியிருக்கிறது. இதுநாள் வரை திருவரங்க கோவில் நிர்வாகிகளும், கோயில் அர்ச்சகர்களும் என் பிறப்பின் அடிப்படையில்
எனக்கு அனுமதி மறுத்ததில்லை. ஆனால் சம்பவம் நடந்த போது யாரும் அவரை தடுக்கவும் இயலவில்லை. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். காரணம் என்னை மதத்தின் பெயரால் மிகவும் சத்தம் போட்டு கூட்டத்தில் பிரிவினையை ஏற்படுத்தியதே காரணம்.

அவமானத்தால் கூனிக் குறுகி எம்பெருமான் அரங்கநாதனின் கோவிலிருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்றிரவு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் ரத்த அழுத்தம் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற்று திரும்பினேன்.
கோவிலில் எந்த பொறுப்பிலுமில்லாத ரங்கராஜன் நரசிம்மன் தான் பிறந்த சமூகத்தின் அடிப்படையில் அரசியல் காழ்புணர்வின் அடிப்படையில் ஆலயத்தின் உரிமையாளரைப் போல தன்னை நினைத்துக்கொண்டு முன் கூட்டியே திட்டமிட்டு நான் வருவதை கண்காணித்து என்னை வழி மறித்து அவமதித்து தகாத சொற்களால் பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தத்தற்கும் எனக்கெதிராக ஒரு தீண்டாமையை நிகழ்த்தி இந்திய இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல் பட்டதற்கும் சம்பந்தப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனை உடனடியாக கைது செய்து விசாரித்து உரிய நீதி வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சியில் தமிழகம், சாதி, மத மோதல்கள் இல்லாத அமைதிப் பூங்காவாக திகழ இதுபோன்ற நபர்களை களையெடுத்து, இவவர்களைப் போன்ற மத வேற்றுமையை வளர்ப்வர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.