வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியது
திருச்சி, அக்.23 ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா மற்றும் சண்முகார்ச்சனை வழிபாடு தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 28-ந் தேதி நடைபெறவுள்ளது. திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை வீடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது. வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பெருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வயலூர் கோயிலில், ஆதிநாதர் சிவன் சன்னதி, ஆதிநாயகி அம்மன் சன்னதி, பொய்யா கணபதி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் உடனுறையும் சுப்பிரமணிய சுவாமி சன்னதி, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு, திருச்சி மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நிகழாண்டு கும்பாபிஷேகம் முடிந்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இரவு 8 மணிக்கு சிங்காரவேலர், பச்சை மயில் வாகனத்தில் திருவீதி வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை கேடயத்தில் திருவீதி உலா நடைபெறும். காலை 11 மணிக்கு சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சேஷ வாகனத்தில் வீதி உலா நடைபெறும். தினந்தோறும் காலையில் சண்முகார்ச்சனை நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை கேடயத்தில் வீதி உலா, இரவு ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். நான்காம் திருநாளான சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அன்னவாகனதத்தில் எழுந்தருளும் சிங்கார வேலர், யானை முக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிங்க முக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கவுள்ளார். திங்கள்கிழமை இரவு ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளிக்கவுள்ளார். தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், வரும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி ப. சக்திவேல், உதவி ஆணையர் லட்சுமணன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர், வயலூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.
இதேபோல, கே.கே. நகர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஐயப்பநகர் தண்டபாணி சுவாமி கோயில், சுப்பிரமணியபுரம் முருகன் சன்னதி, ஆர்எஸ்புரத்தில் உள்ள முருகன் சன்னதி, மேல்ககொண்டையம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது.