முசிறி புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி : சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
திருச்சி, ஜூன் 26 முசிறி புறவழிச்சாலைக்கு நில கையகப்படுத்தும் பணி : சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
திருச்சி மாவட்டம், முசிறிக்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலம் எடுப்பு பணிகளை திருச்சி மாவட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி (நிலஎடுப்பு) ஆய்வு செய்தார்.
முசிறி ஒரு நகராட்சி ஆகும். முசிறி நகரானது முக்கிய மாநகரங்களான திருச்சி, சேலம், ஒசூர், பெங்களுர் நகரங்களை இணைக்கும் முக்கியநகரமாகும். முசிறி சுற்றுப்பகுதியில் உள்ள கிராமமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கும் விளைபொருள் விற்பதற்கும் முசிறி நகருக்கும் மற்றும் அருகிலுள்ள மார்க்கெட்டிங் சென்டருக்கும் வரவேண்டும்.
முசிறி நகரின் மத்தியில் செல்லும் மாநில நெடுஞ்சாலைகளான திருச்சி நாமக்கல் சாலையும் (SH 25) முசிறி துறையூர் ஆத்தூர் சாலையும் (SH 30) மற்றும் முக்கிய மாவட்டசாலையான முசிறி தாத்தையங்கார்பேட்டை-முருகூர்-எரகுடிசாலையும், முசிறி-புலிவலம் சாலையும் ஆக நான்கு சாலைகள் அமைந்துள்ளது. மேலும் இச்சாலைகளின் இருபுறமும் கடைகள் மற்றும் பெரியகட்டிடங்கள் அமைந்துள்ளது இதனால் மக்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. இச்சாலையில் செல்லும் கனரக மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.
எனவே நாமக்கல், துறையூர், சென்னை மற்றும் கரூர் செல்லும் வாகனங்கள் முசிறி நகருக்குள் நுழைந்து மிகுந்த போக்குவரத்து நெருக்கடிக்கு இடையிலேயே மிகுந்த சிரமத்தோடு செல்ல வேண்டிய நிலையில் உள்ளன. மேலும் கனரக வாகனங்கள் நகரின் உள்ளே சென்று நாமக்கல் மற்றும் துறையூர் செல்வதால் முசிறி நகருக்குள் அடிக்கடி விபத்துக்களும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகின்றன. இதனால் முசிறி புறவழிச்சாலை இருவழிச்சாலையாக அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் முசிறி நகருக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும் நாமக்கல், சேலம் மற்றும் தமிழகத்தின் பிற மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல ஏதுவாகவும் முசிறி நகருக்கு புறவழிச்சாலை அவசியமாகிறது. ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள திருச்சி நாமக்கல் சாலையின் இருபுறமும் கடைகள் மற்றும் பெரியகட்டிடங்கள்அமைந்துள்ளதால் சாலைவிரிவாக்கம் செய்யும் போது கட்டிடங்கள் இடிக்கவேண்டியதாலும், நகர எல்லைக்குள் நிலஎடுப்புத்தொகை அதிகம் கொடுக்க வேண்டியதாலும், இதனை தவிர்க்கும் பொருட்டு நகர எல்லைக்குள் வராமல் சமவெளிநிலப்பரப்பு உள்ள கிராம எல்லைவழியாக தொடங்கி முடிய புறவழிச்சாலைமொத்தநீளம் 9.303 கி.மீ தேவைப்படுகிறது.
முசிறி புறவழிச்சாலை அமைப்பதற்கு ஏதுவாக பூர்வாங்க பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஆய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ. வேலு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழ்நாடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷ் அவர்கள் உத்தரவின்படி, திருச்சி கண்காணிப்புப் பொறியாளர் இளம்வழுதி மற்றும் திருச்சி கோட்ட பொறியாளர் கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி முசிறி உட்கோட்ட பொறியாளர் பிரபாகர் அவர்களின் தலைமையில் உதவிப் பொறியாளர்கள் லோகநாயகி மற்றும் லியோபிரதாப் ஆகியோர் மேற்பார்வையில் முசிறி புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு நிலமெடுப்பு அதிகாரிகள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது. நிலம் அளவீடு செய்யும் பணி திருச்சி மாவட்ட நில கையகம் மற்றும் மேலான்மை அலகு பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் சாலை ஆய்வாளர் தனலெட்சுமி மற்றும் சாலைப்பணியாளர்கள், வருவாய்துறையினர் வருவாய் ஆய்வாளர்கள் முசிறி ஜிஜி, மற்றும் தும்பலம் மணி, முசிறி கிழக்கு மற்றும் செவந்தலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன், உதவியாளர்கள் சுரேஷ்குமார், பிரதீப்குமார், முசிறி மேற்கு விஏஓ குருமூர்த்தி, உதவியாளர் வினோத்குமார், புதுப்பட்டி கிழக்கு விஏஒ கார்த்தி, உதவியாளர் சிவசங்கர், புதுப்பட்டி மேற்கு விஏஒ சபாபதி, உதவியாளர் ரெங்கசாமி, முத்தம்பட்டி விஏஒ ஆர்த்தி, உதவியாளர் ரமேஷ், ஆகியோர்கள் உடனிருந்தனர்கள். முசிறி புறவழிச்சாலையானது உமையாள்புரத்தில் ஆரம்பித்து கொக்கு வெட்டியான் கோவில் அருகில் முடிவதாக தெரிய வருகிறது.