டி.என்.பி.எல் நிறுவனத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் நிறுவனத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு ஆய்வு.
திருச்சி, நவ.2 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் அலகு இரண்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திரபாண்டியன், மற்றும் குழு உறுப்பினர்கள் க.அன்பழகன், அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், இராம.கருமாணிக்கம், மு.பெ.கிரி, ஆ.கோவிந்தசாமி, டாக்டர். சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். காகித நிறுவன அதிகாரிகள் பொது நிறுவனங்கள் குழுவினருக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இதனைத்தொடர்ந்து நிறுவன வளாகத்தை சுற்றிப் பார்த்து இயந்திரங்களின் செயல்பாடுகளையும் பார்வையிட்டனர். அப்போது காகித அட்டை தயாரிப்பு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வுசெய்ததுடன் அட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டு நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பொது நிறுவனங்கள் குழுவினர் கண்ணுடையான்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்திலும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தமிழ்நாடு காகித ஆலை நிருவாக இயக்குநர் டாக்டர் சீனிவாசன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.