முசிறி அருகே முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சி, ஜுன் 9 முசிறி அருகே முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள முட்டைகள் சேதம் – தலைமறைவான டிரைவருக்கு போலீஸ் வலை
நாமக்கல்லிலிருந்து திருச்சி நோக்கி முட்டை ஏற்றிசென்ற லாரி, முசிறி காவிரி பெரியார் பாலம் அருகே எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் ஏற்றி வரப்பட்ட சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 1.5 லட்சம் முட்டைகள் உடைந்து சேதம்.
நாமக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் முட்டை பண்ணையிலிருந்து சுமார் ஒன்றரை லட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி இன்று காலை புறப்பட்டு வந்துள்ளது. அப்போது முசிறி காவிரி பெரியார் பாலம் அருகே லாரி சென்றபோது, சாலையோரம் இருந்த வாய்க்கால் கரையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த முசிறி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். லாரி கவிழ்ந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
பின்னர், இரண்டு ராட்சத கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது. லாரி மீட்கப்பட்டபோது, உள்ளே இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து சாலையெங்கும் ஆறாக ஓடியது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.