துறையூர் பத்துமலை முருகன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம் துறையூர் கரட்டு மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காலை நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வில், 34 அடி உயரம் கொண்ட முருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான், பாலதண்டாயுதபாணி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், சிவன், பார்வதி, ஐயப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சமயபுரம், புளியஞ்சோலை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், செட்டிகுளம், வயலூர் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு, இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
முதல் நாள் காலை கணபதி வழிபாடு, அணுக்கை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மங்கள இசை, திருமுறை பாராயணம், வாஸ்து பூஜை, பூரணாஹுதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.
மேலும் கோமாதா பூஜை, யாக வேள்வி பூஜை, உயிர்கலை சந்திக்கட்டுதல், உபச்சார வழிபாடு மற்றும் கடம் புறப்பாடு உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இன்று காலை 9 மணியளவில் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், பத்துமலை முருகனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “அரோகரா… அரோகரா…” என பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆறுபடையப்பா சிலை அமைப்பு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.