சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருச்சி, அக். 17 திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவு
திருச்சி மாவட்டம். துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மணிகண்டன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (42) என்பவர் 16 வயது பூர்த்தியடையாத தனது மகளான பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த 04.08.2018 அன்று இரவு சாப்பிடுவதற்கு பரோட்டா வாங்கி அதில் ஏதோ கலந்து கொடுத்து அசதியாக தூங்கிய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை மிரட்டி மூன்று மாத காலம் பலமுறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 03.08.2019 அன்று சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் கீதா கொடுத்த புகாரின் அடிப்படையில் எதிரி மணிகண்டன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் நேற்று திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முக பிரியா – மணிகண்டனுக்கு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவிக்குமாறும், ரூபாய். 20,000 அபராதமும், வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் அகிலா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.