மணப்பாறையில் மீண்டும் புதன்கிழமைக்கு மாற்றப்பட்ட கால்நடை சந்தை
திருச்சி, ஜூலை 21 மணப்பாறையில் வழக்கம் போல் மீண்டும் புதன்கிழமைக்கு மாற்றப்பட்ட கால்நடை சந்தை. நகராட்சி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் வழக்கம்போல் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்களில் அணிவகுத்து நிற்கும் மாடுகள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தை புதன்கிழமை தான் செயல்பட வேண்டும். ஆனால் சமீபகாலமாக செவ்வாய் கிழமை காலையிலேயே துவங்கி புதன்கிழமை காலை வரை செயல்பட்டு வந்தது. மேலும் கட்டணம் வசூல் செய்ய நகராட்சி மூலம் குத்தகை விடப்பட்டிருந்த நிலையில் குத்தகைதாரர் நகராட்சி விதித்துள்ள கட்டணத்தை தாண்டி பன்மடங்கு அதிகம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் அதற்கான ஆதாரங்களையும் பலரும் உயரதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதன்படி பணம் அதிக வசூல் செய்தது உறுதியானதை அடுத்து நகராட்சி ஆணையர் குத்தகையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதன்தொடர்ச்சியாக இந்த வாரம் முதல் நகராட்சி நிர்வாகமே நேரடியாக வசூல் செய்ய உள்ளது. ஆனால் சமீபகாலமாக செவ்வாய்கிழமையே சந்தை நடைபெற்று வந்த நிலையில் இனி எப்போதும் நகராட்சி அதிகாரப்பூர்வ நாளான புதன்கிழமை தான் கால்நடை சந்தை நடைபெறும் என்று நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருவதுடன் விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திடீர் அறிவிப்பால் இன்று நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான மாடுகளை அழைத்து வந்துள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என்னசெய்வதென்று தெரியாமல் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வந்திருக்கும் சூழலில் மீண்டும் மாடுகளை அழைத்து செல்வதால் பல ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டு விடும்.
ஆகவே இந்த வாரம் மட்டும் செவ்வாய்கிழமை அனுமதிக்க வேண்டும், அடுத்த வாரம் முதல் புதன்கிழமையில் செயல்படட்டும் என்று சந்தைக்கு வந்துள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் சந்தை நாளை தான் செயல்படும் என்ற நகராட்சியின் அறிவிப்பால் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான மாடுகளை வைத்துக்கொண்டு திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காத்துள்ளனர்.