2026 இல் மாரிஸ் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்: துரை வைகோ எம்.பி பேட்டி.
திருச்சி, ஜூன் 21 திருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எம்பி துரை வைகோ கூறினார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேற்றும் தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
திருச்சி மாவட்டத்தில் ரயில்வே துறை சார்பில் நடந்து வரும் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது… இதில் சஞ்சீவி நகர் லெவல் கிராசிங் பகுதியில் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதிமக்களின் வெகுநாள் கோரிக்கையாக இருந்தது, அதற்கான ஆய்வு நடத்தப்பட்டு, மேற்படி பணிகளை துவங்க தேவையான ஆய்வுகள் ரயில்வே துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதில் அப்பகுதி மக்கள் அந்த லெவல் கிராசிங் அருகே சில மீட்டர் தூரங்களில் மற்றொரு லெவல் கிராசிங் பகுதியில் சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அதை நிறைவேற்ற அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன். மேல குமரேசபுரம் பகுதியிலும் மேம்பாலம் கட்ட ரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன், அங்கு மாநில அரசின் பல துறைகள் சார்ந்து இருப்பதால் அனைவருடனும் ஆலோசித்து ரயில்வே துறையுடன் சேர்ந்து மேம்பாலம் கட்ட விரை வில் நடவடிக்கை எடுக்கப்படும். மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் தற்போது மெமு செட் அமைக்கட்ட பட்டு வருகிறது. சமீபத்தில் அந்த வழியாக மக்கள் போக்குவரத்து இயங்கள் முடியாத நிலை இருந்தது. இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். எனவே அப்பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு ஏதுவாக சுமார் 5 மீட்டர் நீளத்திலும் 3.66 மீட்டர் உயரத்திலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தர ரயில்வே நிர்வாகத்திடம் கோரியுள்ளேன். அதற்கான பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
திருச்சியில் வந்தே பாரத் ரயில்களை பழுது நீக்க. பணிமனை ரூ.300 கோடியில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கூறியுள்ளளேன். இதனால் பல பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். அதேபோல் தற்போது நடந்து வரும் கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் சற்று தாமதம் ஏற்பட் டது. அதை தென்னக ரயில்வே பொதுமேலாளர் மற்றும் திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோரிடம் ஆலோசித்து ரயில்வே துறை சார்ந்த வேலைகளை முடித்துதர கோரிக்கை விடுத்தேன். அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த பாலம் முழுமையாக மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி – திருப் பதி, திருச்சி – கொச்சின், திருச்சி – பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் ரயில் சேவைகள் வழங்க மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தேன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பரிசீலித்து முதல் கட்டமாக திருச்சி – திருப்பதி வழித்தடத்தில் ரயில் சேவை இயக்க பரிந்துரைத்து வருகிறார், விரைவில் இது குறித்து தகவல்கள் வெளியிடப்படும்.
திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி பல ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் ஒரு மக்களின் கோரிக்கையாக உள்ளது. நெடுஞ்சாலை இருபுறமும் காவிரி மற்றும் ரயில்வே தண்டவாளங்கள் இருப்பதால் சாலை விரிவாக்க பணி சவாலாக உள்ளதாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திட்டத்தின் வாயிலாக விரைவில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதுகுறித்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்த உள்ளேன் என்று துரை வைகோ கூறினார்.