விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசைக் கண்டித்து சாலை மறியல்

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காவல்காரன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் 1205 விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது அமைந்துள்ள தமிழக அரசு 2025 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2026 பிப்ரவரி மாதம் வரை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி நிபந்தனைகளுடன் செய்வதாக அறிவித்தது. ரூபாய் 75 ஆயிரத்துக்குள் பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும் அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 35000 மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காவல்காரன்பட்டியில் கூட்டுறவு சங்கத்தில் அரசு அறிவித்த உள்ள காலக்கெடுவுக்குள் 665 விவசாயிகள் தள்ளுபடி பெறுவதற்கு தகுதியானவர்களாக இருந்தனர். இதில் ரூபாய் 75000 க்குள் கடன் பெற்ற 220 விவசாயிகள் முழு கடன் தள்ளுபடியும் மீதமுள்ள 445 விவசாயிகளுக்கு ரூபாய் 35 ஆயிரம் மட்டும் தள்ளுபடி பெற தகுதியானவர்களாக கூட்டுறவு சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு அறிவித்த காலக்கெடுவுக்குள் முன்பு கடன் பெற்ற விவசாயிகள் தங்களது கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும். அதேபோல் முதல்வர் ஜோசப்விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் 5 லட்சத்திற்குள் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும் அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தொகையில் பாதியும் காலக்கெடு விதிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி இன்று விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு மணப்பாறை – துவங்குறிச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து வந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் வந்து தங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் எனக்கோரி கூட்டுறவு கடன் சங்கம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை எம்.எல்.ஏ.கதிரவன் விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.