தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக ம.தி.மு.க. மாநாடு அமைந்துள்ளது: துரை வைகோ எம்.பி. பேட்டி
திருச்சி, செப். 16 திருச்சியில் நேற்று நடைபெற்ற மதிமுக மாநாட்டில் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்சி சிறுகனூரில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை பறைசாற்றும் வகையில், ம.தி.மு.க. மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழகத்திற்கு தேவையான கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது.தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் யாரும் மறுக்க முடியாத சக்தியாகவும் ம.தி.மு.க. மாநாடு அமைந்துள்ளது. இயக்க நிர்வாகிகள் தோழர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. அண்ணாதுரை கனவு கண்ட வளமான தமிழகம் வலிமையான தமிழகம் அமையும் வரை ம.தி.மு.க. தொடர்ந்து இயங்கும். மல்லை சத்தியா புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுகிறதே என்றதற்கு, ‘வாழ்க வளர்க என்றார்.
வக்ப் திருத்த சட்டம் இஸ்லாமியரின் உரிமைகளை பறிக்கும். அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தி ஆழமாக பதிவு செய்தது. சிறுபான்மையினரை அச்சுறுத்தும் விதமாக மத்திய பாஜ அரசு சட்டங்களை கொண்டு வருகிறது. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் விதமாக 130 வது அரசியல் சட்ட திருத்த மசோதா போன்ற பல விஷயங்கள் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளோம்.
மத்திய அரசு தொடர்ந்து ஜனநாயகத்துக்கு புறம்பான செயல்களை செய்து கொண்டிருப்பதை ம.தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும். இந்த இயக்கத்தின் அங்கீகாரம் குறித்து பேசும்போது அழுத்தமாக பேசினேன். அதற்கு கூட்டத்தில் இருந்து அந்த கரகோஷத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தாலும் நாரதர் வேலையை செய்கிறீர்கள். சட்டசபை தேர்தலில் சீட்டு எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல்,கொள்கை ரீதியாக இயங்குவதால் மக்கள் மத்தியிலும் அங்கீகாரம் வரும் போது, தேர்தல் களத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
எட்டு ஆண்டுகளாக தொடரும் இந்த கூட்டணி என்ன நோக்கத்திற்காக இணைந்ததோ அதே நோக்கத்துடன் தொடர்கிறது. சிறு சிறு வருத்தங்கள் இருந்தாலும் மதவாத கூடாது வேரூன்ற கூடாது என்ற ஒற்றை இலக்குடன் அனைவரும் கூட்டணி அமைத்திருக்கிறோம். அந்த நோக்கம் தொடர்வதால் கூட்டணி வலுவாக இருக்கிறது.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க., கொள்கை ரீதியாக பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. கூட்டணியில் இருப்பவர்கள் மதவாத சக்திகள் தலையெடுத்து விடக் கூடாது என்ற முடிவோடு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.