இந்தியாவின் பன்முகத்தன்மையை பா.ஜ.க. அரசு சிதைக்கப் பார்க்கிறது : துரை வைகோ எம்.பி. பேச்சு

0 179
Stalin trichy visit

திருச்சி, செப். 16  மதிமுக பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா மாநாடு, திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கட்சியின் ஆட்சி மன்ற குழு செயலாளருமான டாக்டர்.சி.கிருஷ்ணன் தலைமையில், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேகரன் வரவேற்புரையாற்றினார். கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டாக்டர்.ரொஹையா ஷேக் முகமது கட்சியின் கொடியை ஏற்றினார்.

பேரறிஞர் அண்ணா சுடரை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு.சின்னப்பா ஏற்றி வைத்தார்.சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திராவிட இயக்க வரலாற்று கண்காட்சியை திறந்து வைத்தார்.

அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர்.வரதராஜன் திராவிட இயக்க மூவர் படங்களை திறந்து வைத்தார்.அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பெரம்பலூர் துரைராஜ் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, பேரறிஞர் அண்ணா படத்தை திறந்து வைத்தார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மொழிப்போர் தியாகிகளின் படங்களை திறந்து வைத்தார்.  ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.  

மாநாட்டில் மதிமுக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ பேசுகையில்,

பெரியார், அண்ணா பங்களிப்பு இல்லை என்றால் இந்த மண்ணில் சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணுரிமை, இரு மொழி கொள்கை என எதுவும் இல்லாமல் போயிருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அண்ணாவின் சித்தாந்தம் தான் காரணம்.

ஆங்கில மொழியை தவிர்த்து விட்டு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்த வட மாநில நிலை நமக்கு தெரியும். இரு மொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள்.

தமிழக மாணவ, இளைஞர்கள் மீது ஒன்றிய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடித்தளத்தை தகர்த்து விட்டு, பன்முக கலாச்சாரத்தை அகற்ற பா.ஜ.க முயல்கிறது.

இந்தியை திணிப்பதன் மூலம் தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்தை தடுக்க பார்க்கிறார்கள். புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் கல்விக்கான நிதியை தர மறுக்கிறார்கள். கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி என எந்த நிதியையும் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு முழுமையாகவும் முறையாகவும் வழங்குவதில்லை. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில சுயாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்கிறார்கள்

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற மசோதாவை எந்த வித விவாதமுமின்றி நிறைவேற்றி உள்ளார்கள். இது பாசிச சட்டம். எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மிரட்ட தான் இதை பயன்படுத்துவார்கள் இந்த சட்டத்தை பா.ஜ.க அரசு திரும்ப பெற வேண்டும்.

மதிமுக வை அழிக்க 32 ஆண்டுகளாக சிலர் முயற்சித்தார்கள் அது அப்போது முடியவில்லை, இப்போதும் முடியவில்லை, எப்போதும் முடியாது. நான் விழப்போவதுமில்லை, நீங்கள் வீழபோவதுமில்லை மதிமுக எப்போதும் வீழப்போவதில்லை என்றார்.

துரை வைகோ தன் பேச்சின் போது மாநாட்டிற்கு உழைத்தவர்களுக்கு நன்றி கூறினார். அப்போது அவர் கண் கலங்கினார்.

மாநாட்டில் பேருரையாற்றிய வைகோ,

மனிதர்கள் வருவார்கள், போவார்கள், சிலர் விலகி போவார்கள் ஆனால் என் பயணம் நிற்காது என்கிற ஆங்கில கவிதை போன்றது தான் மதிமுக வின் பொது வாழ்க்கை.

ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியது, முல்லை பெரியாறு அணையை பாதுகாத்தது,
நியூட்ரினோ ஆலையை தடுத்தது, என்.எல்.சி தனியார்மயமாவதை தடுத்தது உள்ளிட்ட எண்ணற்றவற்றை மதிமுக செய்துள்ளது. உங்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாட்டில் நடக்கும் ஜனநாயக படுகொலைகளை அடுக்கடுக்காக துரை வைகோ கூறினார். துரை வைகோ பேச்சை கேட்டு நான் திகைத்து விட்டேன். அவர் பேச்சுக்காக ஆற்றல் தந்தது நீங்கள் தான்.

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற சட்டம் கொண்டு வருவது ஹிட்லர், முசோலினியின் பாசிச போக்கு. இதை கட்சி வித்யாசமின்றி அனைவரும் எதிர்க்க வேண்டும். இன்று இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்களில் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள். மொழி பிரச்சனையில் தமிழ்நாடு தான் இந்தியாவிற்கே வழிக்காட்டுகிறது

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்பதை தாரக மந்தீரமாக கொண்டு ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடத்தி அதில் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும், முஸ்லீம்களுக்கு ஓட்டுரிமை கிடையாது, சமஸ்கிருதம், இந்தியும் தான் ஆட்சி மொழி உள்ளிட்ட பிரகடனத்தை செய்துள்ளார்கள்.

இந்தியாவை இந்திய ஐக்கிய நாடுகள் என்று தான் அழைக்க வேண்டும் என ஏற்கனவே ஒரு மாநாட்டில் தீர்மானம் போட்டுள்ளோம். அண்ணா நாடாளுமன்றத்தில் பேசும் போது கூட திராவிட நிலப்பரப்பிலிருந்து வந்துள்ளேன் என்று தான் குறிப்பிட்டார். வரும் காலத்தில் கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்துங்கள். நம்முடைய கவனம் அனைத்தும் இலட்சியத்தில் தான் இருக்க வேண்டும்.

1967 தேர்தலுக்கு முன்பாக அண்ணா திமுகவினருக்கு கொடுத்த அறிவுரை “உங்கள் கவனமனைத்தும் தேர்தலில் தான் இருக்க வேண்டும், தேர்தலில் நாம் வெல்ல வேண்டும் வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது என குறிப்பிட்டார். அதை தான் நானும் குறிப்பிடுகிறேன்.

திமுகவினரோடு பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். திராவிட மாடல் ஆட்சி நடத்த முதல்வர் ஸ்டாலின், அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் குறுக்கே சுவர் எழுப்பி தடுத்து கொண்டுள்ள ஒன்றிய அரசு தான். வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்துள்ள முதல்வருக்கு வாழ்த்துகள். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என சிலர் விவாதிக்கிறார்கள். 2026 தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறுவோம். திமுகதனி பெரும்பான்மை பெறும் என்பதை இந்த மாநாட்டில் பிரகடனம் செய்கிறேன்.

திராவிட இயக்கங்களின் கொள்கைகளை காக்க, அண்ணா, கலைஞரின் லட்சியங்களை வென்றெடுக்க நாம் போராடுவோம். என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை இனியும் விமர்சிக்க மாட்டேன். வசவாளர்கள் வாழ்க.

திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என உள்துறை அமித்ஷா கூறுகிறார். அவர் கூறுவது பேரண்டத்தை இரண்டு விரலால் அளந்து விடுவேன் என கூறுவது போல் அறியாமையானது. , கடலை குடித்து விடுவேன் என ஒருவர் கூறுவது போன்ற வார்த்தைகளை தான் அமித் ஷா கூறியுள்ளார். பலரின் தியாகத்தால் உருவாகி வேரூன்றி வளர்ந்துள்ள திராவிட இயக்கத்தை ஒரு போதும் நெருங்க முடியாது. அமித் ஷாவின் கனவு பகல் கனவாகும் அது ஒரு போதும் பலிக்காது என்றார்.

இந்த மாநாட்டில் அனைவருக்கும் நன்றி கூறும் போது ஒலி பெருக்கி ஒருவரை பேசவும் வைக்கவும், பேச்சுக்கு தடங்கலையும் ஏற்படுத்தும் சிறப்பாக ஒலி பெருக்கி அமைத்து கொடுத்தவருக்கு நன்றி என்றார்.

இந்த மாநாட்டில், 2026 தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்
அதற்கு மதிமுக பாடுபடும், சிறப்பு வாக்காளர் திருத்த விவகாரத்தில் பா.ஜ.கவின் சதியை முறியடிக்க வேண்டும், மக்கள் பிரதிநிதிகள் ஏதாவது குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.