மணப்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
திருச்சி, மார்ச் 31 மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முதல்நாளில் வேட்பு மனு தாக்கல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மு.அருணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் இருந்து தமது கட்சியினர் புடைசூழ தப்பாட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வேட்பு மனுதாக்கல் செய்ய சென்றார். மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தனது கட்சியினருடன் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின், கட்சியின் சின்னம் மற்றும் வாக்குறுதிகள் குறித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்ட வேட்பாளர் அருணகிரி மற்றும் நாதகவினரை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேர் செல்லமட்டுமே அனுமதி என தெரிவித்தனர். இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் மட்டும் வட்டாட்சியர் அலுவலகம் சென்று அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான இன்று மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் முதல் வேட்பாளராக நாதக வேட்பாளர் அருணகிரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.