தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின் நவராத்திரி விழா
திருச்சி, அக், 12 திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாகத் தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் கொலுப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, விநாயகர், மாவடி முருகன், ஆறுபடை முருகன் வீடு தெய்வங்கள், கார்த்திகை பெண்கள், வாராகி,சங்கரர், மகா பெரியவர் உள்ளிட்ட பல்வேறு தெய்வத் திருமேனிகளும், கல்யாண வைபவ பொம்மைகளும் வரிசையாக வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, சிறப்பு யாக வேள்வி நடைபெற்றது. அதில் மழை வேண்டி, விவசாயம் செழிக்கவும், உலக அமைதிக்காகவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் மேம்படவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன் மற்றும் கொலுப்படிகளுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, திருமணத் தடை நீங்கவும், சொந்த வீடு அமையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கொலுவுக்குப் பொம்மைகள் வாங்கி வைப்பதாக நேர்த்திக்கடனும் நேர்ந்து கொண்டனர். வழிபாட்டின் நிறைவில் பக்தர்களுக்குப் , மிளகுப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், லெமன் சாதம் உள்ளிட்ட அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.