பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை: அய்யாக்கண்ணு பேட்டி

0 14
Stalin trichy visit

​திருச்சி, ஆக. 19 விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் காவிரி தண்ணீர் உரிமை குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
​தமிழக முதல்வர் தேர்தலுக்கு முன்பு, ‘சிறுகுறு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்; பெரிய விவசாயிகள் வாங்கிய கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்’ என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கர்நாடகா உரிய தண்ணீரைத் திறக்காததால் குருவை சாகுபடி செய்ய முடியாமல் 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் வீணாகிவிட்டன. சம்பா சாகுபடிக்கு நாற்று நடுவதற்குக் கூட வழியில்லாத சூழல் உருவாகி, கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

​முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ரூ18,000 கோடியும், ஜெயலலிதா ஆட்சியில் ரூ23,000 கோடியும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல், 2021 முதல் விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து, விவசாயிகளைத் தற்கொலையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடகா திறந்து விடாததால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ரூ 1 லட்சம் கோடி நஷ்டஈடு பெற்றுத்தரக் கோரி, குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். இதற்காக வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திருச்சியிலிருந்து புறப்பட்டு, 4-ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க உள்ளோம்.

​எங்களை வழியில் காவல்துறை மறித்தால், மீண்டும் திரும்பாமல் மாதக்கணக்கில் அங்கேயே தங்கிப் போராட்டம் நடத்துவோம். அதற்குமுன், அனைத்து விவசாய சங்கத் தலைவர்களையும் அழைத்து திருச்சியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். எங்கள் கோரிக்கைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ​இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.