திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை குழு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

0 34
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3  திருச்சி அரசு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்த
விவகாரத்தில் விசாரணைக்குழு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூக்கடைப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில், அவருக்கு செலுத்தப்பட்ட டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) மருந்தே உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே 22-ம் தேதி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 20 வயதுடைய மூன்றாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி என்பவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த ‘டெக்ஸாமெதாசோன்’ மருந்து செலுத்தப்பட்டது. ஆனால், மருந்து செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே அவருக்குக் கடுமையான இதய பாதிப்புகள் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் நர்சிங் கல்லூரி மாணவிகள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

டெக்ஸாமெதாசோன் மருந்து பொதுவாக ஒவ்வாமையைக் குணப்படுத்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்டீராய்டு மருந்தாகும். அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் குமட்டல், வாந்தி மற்றும் வலி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மயக்க மருந்து சிகிச்சையின் போதும் இது பயன்படுத்தப்படுகிறது. அரிதான காலங்களில் இது கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவத்துறையில் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் சுகாதாரத் துறை ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் தங்களது விரிவான ஆய்வறிக்கையை தற்போது சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

உயிரிழந்த மாணவிக்குச் செலுத்தப்பட்ட அதே தொகுதி எண்ணைக் கொண்ட மருந்து, மருத்துவமனையில் இருந்த மேலும் மூன்று நோயாளிகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அந்த மூன்று நோயாளிகளுக்கும் கடுமையான இதய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, இதயத் துடிப்பு அதிகரிப்பு, இதயத் தசை சிதைவு, இதய செயலிழப்பு மற்றும் அதிர்ச்சி நிலை போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட தொகுதி மருந்தின் உற்பத்தித் தரத்தில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதால், இதனை உடனடியாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்தத் தொகுதி மருந்துத் துகள்களைப் பயன்படுத்த சுகாதாரத்துறை உடனடியாகத் தடை விதித்துள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் கையிருப்பில் உள்ள அந்தத் தொகுதி மருந்துகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த செவிலியர் மாணவியின் உடல் உறுப்பு பாகங்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆராய்ச்சி மையத்திற்கு ஆய்வுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன.
அங்கிருந்து வரவிருக்கும் இறுதி ஆய்வறிக்கையின் அடிப்படையில் மட்டுமே, இந்த மருந்தின் மீதான சந்தேகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்றும், மாணவியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் முழுமையாகத் தெரியவரும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.