திருச்சி மாநகரில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 41 சதவீதம் மட்டுமே நிறைவு

0 17
Stalin trichy visit

திருச்சி, ஆக. 26 நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, முதன்முறையாக சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சுய கணக்கெடுப்பு கடந்த மாதம் 17-ந்தேதி நாடு முழுவதும் தொடங்கி கடந்த 31-ந்தேதி வரை தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் நடந்தது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பில் சுமார் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் வீடு வீடாக நேரடியாக கணக்கெடுப்பாளர்கள் சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மாநகராட்சிப் பகுதி 1,728 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. களப்பணிக்காக 30 மேற்பார்வையாளர்களையும் 1,850 கணக்கெடுப்பாளர்களையும் மாநகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.

ஒவ்வொரு கணக்கெடுப்பாளரும் சுமார் 200 முதல் 250 வீடுகள் வரையிலான கணக்கெடுப்புப் பணிகளைக் கண்காணிக்க வேண்டும். முதற்கட்டப் பணியில் அனைத்து கணக்கெடுப்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எச்.எல்.பி.யின் எல்லைகளை அடையாளம் காணும் பணியையும், எச்.எல்.பி. அமைப்பு வரைபடத்தின் தோராய வரைபடம் வரையும் பணியையும் நிறைவு செய்துள்ளனர். திருச்சி மாநகராட்சியில் நேற்று முன்தினம் நிலவரப்படி, சுமார் 712 தொகுதிகளில் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மீதமுள்ள 1,016 தொகுதிகளில் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. பல கணக்கெடுப்பாளர்களால் பிற்பகல் நேரங்களில் மட்டுமே பணியை மேற்கொள்ள முடிகிறது. இதனால், திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் சுமார் 41 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்கும் வகையில் பணிகளைத் துரிதப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கணக்கெடுப்பு பணி வேகம்குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்த்தபடி பணிக்கு வராததே ஆகும். மேலும், சில கணக்கெடுப்பாளர்களால் காலை மற்றும் மாலைவேளையிலும், சில கணக்கெடுப்பாளர்கள் பிற்பகல் மற்றும் பள்ளி முடிந்த பின்னரும் மட்டுமே கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டதால் பணியை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.