பஞ்சப்பூர் பேருந்து முனையம் 16 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

0 236
Stalin trichy visit

திருச்சி ஜூலை 14 பஞ்சப்பூர் பேருந்து முனையம் 16 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழராஜபுரம், உய்யக்கொண்டான் திருமலை , கோப்பு, பீமநகர், கிராப்பட்டி , எடமலைப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமை பார்வையிட்டு திருச்சி எடமலைப்பட்டிப் புதூர் எஸ்.ஏ எஸ். அடுக்கு மாடி குடியிருப்பில் திமுக. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,அவர் கூறியதாவது:-
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட பேருந்து முனையம் கடந்த மே 9 ந்தேதி முதலமைச்சரால் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் வருகிற 16ந் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வந்த சில நாட்களில் அனைத்து கடைகளும் இயங்கும்.

சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும். தற்போதைக்கு தனியார் பேருந்துகள் விருப்பப்பட்டால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் போது தனியார் பேருந்துகளும் அங்கு வந்து விடுவார்கள். ஆனால் அனைத்து அரசு பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக பிரித்து அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிளாஸ்டிக்கை உரமாக மாற்றினோம், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அங்கிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் அனுப்பப்பட்டது தற்பொழுது அந்த பிளாஸ்டிக் மூலம் சாலை அமைப்பது உள்ளிட்ட வேறு பணிகளுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும் குப்பைகளை வேறு எங்கும் கொட்ட முடியாத சூழலில் அரியமங்கலம் குப்பைகிடங்குள்ளேயே கொட்டி வருகிறோம்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு தான் . மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி அந்த திட்டத்தை நிறுத்துவோம்? நிச்சயம் அந்த திட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராத எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் ஆயிரம் ரூபாய் தந்த பின்பு 1500 ரூபாய் தருவோம் என பேசுகிறார். உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக பரவும் தகவலில் உண்மை இல்லை நாங்கள் ஏற்படுத்திய அமைப்பை நாங்களே எப்படி கலைப்போம்? .இவ்வாறு கேஎன் நேரு கூறினார்.

நிகழ்ச்சியின் போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் , கதிரவன் எம்.எல்.ஏ. மாவட்ட பொருளாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், குடமுருட்டி சேகர், மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, தகவல் தொழில் நுட்ப அணி மேற்கு தொகுதி பொறுப்பாளர் கேசவன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.