தீபாவளியை முன்னிட்டு என்.எஸ்.பி. சாலையில் காவல் உதவி மையம் : மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
திருச்சி, அக்.11 தீபாவளி திருநாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி ஆய்வாளர் மையத்தை மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்
தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் போது மக்களின் பாதுகாப்பை கருதியும் என் எஸ் சி பி சாலையில் கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்தவும் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிக்கவும் தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு இன்று மாலை மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார் .
மேலும் சத்திரம் பேருந்து நிலையம், பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆய்வாளர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்ற சம்பவம் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கூட்ட நெரிசலில் குற்றங்களை தடுக்கவும் சந்தேக நபர்களை கண்காணிக்கவும் 8 கண்காணிப்பு கோபுரங்கள் என் எஸ் சி பி சாலை புறக்காவல் நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் அதிநவீன சுழலும் கேமராக்கள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் காந்தி மார்க்கெட் , பெரிய கடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர் தெரு, நந்தி கோவில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 114 க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற நடத்தை காரர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்குரிய மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அவற்றை இயக்குவதற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழா வண்ணம் காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாகவும், புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மானிட்டர்கள் மூலமாகவும் நாள் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கூட்டம் நிறைந்த பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள காவலர்கள் எஃப் ஆர் எஸ் செயலி மூலம் சந்தேக நபர்களை முக அடையாளங்களை சரிபார்த்து கெட்ட நடத்தை காரர்களின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு குற்ற தடுப்பு பாதுகாப்பிற்காக தீபாவளி பண்டிகை கால பாதுகாப்பு பணிக்காக 3 காவல் உதவி ஆணையர், 9 காவல் ஆய்வாளர்கள், 14 சார்பு ஆய்வாளர்கள் 80 காவல் ஆளிநர்கள் மற்றும் 90 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் போக்குவரத்து ஒழுங்கு பாதுகாப்பிற்காக போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில் 3 காவல் ஆய்வாளர், 6 சார்பு ஆய்வாளர்கள், 95 காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு என மொத்தம் சுமார் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அச்சமின்றி கடை வீதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் காமினி தெரிவித்தார்.