நிலத்தகராறில் இருதரப்பினரிடையே மோதல் : காவல்துறையினர் விசாரணை

0 283
Stalin trichy visit

திருச்சி, டிச.10  திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே நிலத்தகராறில் இருதரப்பினரும் கட்டையால் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே எம்.கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது வீட்டின் அருகே உள்ள நிலம் சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசெல்வனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து இருதரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணையானது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் 08.12.2025 அன்று மதியழகன் தரப்பினருக்கும் தனசெல்வன் தரப்பினருக்கும் நிலம் சம்பந்தமாக மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தனசெல்வன் தரப்பினர் மதியழகன் மனைவி ஜெயக்கொடியை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டனர்.

மேலும் தனசெல்வன் தரப்பினர் மதியழகன் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் மதியழகன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகராறில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரிடையே கல்லக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.