காட்டூரில் பொங்கல் விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, ஜன.26 திருவெறும்பூரை அடுத்த காட்டூர், ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு மற்றும் இராஜ்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா, நேற்று (25-01-26 ஞாயிறு) முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோலப் போட்டி, சமையல் போட்டி, சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகியன நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, சங்கத்தின் மூத்த உறுப்பினர்களைப் பாராட்டியும், தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு சிறப்பு பரிசை வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். பின்னர் சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டியையும் தொடங்கி வைத்தார். மாலை வையம்பட்டி பாரம்பரியக் கலைக் குழுவினரின் உறுமி தேவராட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இரவு சிறுவர்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மதிவாணன், அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் குடியிருப்பு வாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.