பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் வங்கி பணியாளர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் மோட்டார் பைக்குகள் மோதிக் கொண்டதில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.
திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் லோகேஷ்வரன்(32) .இவர் ஆங்கரையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு பணிகளை முடித்து விட்டு வீட்டிற்க்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது வாளாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் பைக் மோதி் விபத்துக்குள்ளானது. இதில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.எதிரே மோட்டார் பைக்கில் வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.