பைக் மீது மோதிய தனியார் பேருந்து : மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

0 14
Stalin trichy visit

திருச்சி, செப். 28  திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கோட்டத்தூர் பகுதியை சேர்ந்த சரவணனின் மகன் கவின் (வயது 16). இவர் உப்பிலியபுரம் அருகே உள்ள சிக்கத்தம்பூரில் வசிக்கும் தனது சித்தி நித்தியா என்பவர் வீட்டில் தங்கி உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் சிக்கத்தம்பூரை சேர்ந்த சந்தோஷ்குமாரின் மகன் யோகேஸ்வரன் (வயது 16) பிளஸ்-2 படித்து வந்தான்.

உறவினர்களான கவினும், யோகேஸ்வரனும் இணை பிரியாத நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு உறவினரின்  பைக்கை எடுத்துக் கொண்டு சொந்த வேலையாக உப்பிலியபுரம் சென்றனர்.  பைக்கை கவின் ஓட்டிச் சென்றார். பின்னால் யோகேஸ்வரன் அமர்ந்து இருந்தான். பின்னர் அவர்கள் அங்கிருந்து சிக்கத்தம்பூர் நோக்கி வந்தனர்.

ஒக்கரை பிரிவு சாலை அருகே வந்த போது எதிரே துறையூரில் இருந்து தம்மம்பட்டி சென்ற தனியார் பேருந்தும், பைக்கும் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித் தகவல் அறிந்த உப்பிலியபுரம் காவல் ஆய்வாளர் மாரிமுத்து, காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கான துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சேலம் மாவட்டம்  -மல்லியகரையை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (37) மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.