காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்: விவசாயிகள் 25 பேர் கைது
திருச்சி, நவ.5 திருச்சி மாவட்டம் முசிறியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றில் இருந்து மழை வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை அய்யாற்றில் திருப்பி விட வேண்டும், 2000 கன அடி நீரை காவிரி அய்யாறு இணைப்பு கால்வாய் திட்டத்தில் செயல்படுத்தினால் சேலம் நாமக்கல் திருச்சி பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் 5 லட்சம் புஞ்சை நிலங்கள் நஞ்சை நிலமாகும் ஆயிரக்கணக்கான ஏரி குளங்கள் நிரம்பி ஆயிரம் அடிக்கு கீழ் உள்ள நிலத்தடி நீர்மட்டம் 20 அடிக்கு வர வாய்ப்புள்ளது எனவே காவிரி அய்யாறு கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,
மழைக்காலங்களில் 25 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் மத்திய அரசு டிபிசி மூலமாக கொள்முதல் செய்யப்படும் என பிரதமர் மோடி கூறியதை ஒரு கிலோ நெல்லுக்கு ௹54 தரவேண்டும்.
டிபிசியில் கொள்முதல் செய்யும் 40 கிலோ நெல்லுக்கு ரூபாய் 80 லஞ்சம் கேட்பதை தமிழக முதல்வர் தலையிட்டு தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி நேற்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போலீசார் அனுமதியின்றி முசிறி காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி மூன்று பெண்கள் உள்பட25 பேரை கைது செய்தனர்.இது தவிர காவிரி ஆற்றின் நடு மணல் திட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 10 விவசாயிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளும் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.