மணப்பாறை அருகே பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, மார்ச் 22 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது கருங்குளம் கிராமம். இக்கிராமத்தின் வழியாக கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதால் கடந்த மூன்று மாதமாக செக்கணம் ஊராட்சியில் உள்ள கிராம பகுதிகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இது குறித்து வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். அதிகாரிகள் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை சரி செய்து தர சம்மதித்துள்ளனர்.
இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை சரி செய்யாமல் அப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகளை முடித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் இன்று அவ்விடத்தை காலி செய்து கொண்டு தங்களது லாரி, கம்ப்ரசர் ஹிட்டாச்சி, கிரேன் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்ட போது தகவல் அறிந்த பொதுமக்கள் சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை சரி செய்து தராமல் இங்கிருந்து செல்லக்கூடாது என வாகனங்களை மறித்து வையம்பட்டி – கரூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் குழாய் மற்றும் இடிக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி காம்பவுண்ட் சுவர் ஆகியவற்றை சரிசெய்து தந்த பின்னரே வாகனங்களை எடுத்துச் செல்வார்கள் அதுவரை வாகனங்கள் கருங்குளத்திலேயே இருக்கும் என உத்தரவாதம் அளித்தனர். இதனால் சமாதான மடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வையம்பட்டி – கரூர் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.