தொட்டியத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு
முசிறி தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். சட்டமன்ற உறுப்பினர் தேர்தலின் போது முசிறி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காடுவெட்டி தியாகராஜன் முசிறி தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தரப்படும் என திமுக சார்பில் வாக்குறுதி அளித்திருந்தார்.
தேர்தலில் முசிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் சட்டசபையில் முசிறி தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசியிருந்தார்.
மேலும் நகராட்சி துறை அமைச்சர் கே. என். நேருவிடமும் கோரிக்கையும் அளித்திருந்தார். இதனையடுத்து நேற்று தொட்டியத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதற்காக கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், பொதுப்பணித்துறை துணை இயக்குனர் கார்த்திக் ஆகியோர் தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் கல்லூரிக்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் திருஞானம், தங்கவேல், நகர செயலாளர் விஜய் ஆனந்த், ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி , துணைத் தலைவர் சத்தியமூர்த்தி,
பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.