காவல்துறையினர் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி கடந்த 04.02.23-ந்தேதி திருச்சி மாநகர ஆயுதப்படையில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாமும், 20.05.23-ந்தேதி திருச்சி காவேரி பல்நோக்கு மருத்துவமனை காது சம்மந்தபட்ட சிறப்பு முகாமும், 17.06.23-ந்தேதி திருச்சி காவேரி பல்நோக்கு மருத்துவமனை சார்பில் ஏர்போர்ட் மொராய்ஸ்சிட்டியில் “இதயம் காப்போம்” என்ற தலைப்பில் இதயம் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.
இன்று(13.07.23)-ந்தேதி காலை 1000 மணியளவில் திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில், காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமினையும், “அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ்” என்கிற வாகனத்தையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை மூத்த தலைமை செயல் அதிகாரி நீலகண்ணன் மற்றும் மூத்த பொது மேலாளர் தலைமை அதிகாரி சாமுவேல், திருச்சி மாநகர காவல் ஆணையர்கள் (தெற்கு & வடக்கு), கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை) காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டார்கள். இந்த முகாம் இன்று 13.07.23 முதல் 4 நாட்கள் நடைபெற உள்ளது.