பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை
திருச்சி ஜூன் 7 ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு தொழுகை
திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை அப்துர் ரவற்மான் தலைமையில் ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மற்றும் அறக்கட்டளைக்குச் சொந்தமான முஹம்மதியா பள்ளிவாசல், பேரம் பள்ளிவாசல்,
ஹசன் பாக் பள்ளிவாசல், மற்றும் அமீர் பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும் தொழுகை நடைபெற்றது.
இதே போன்று திருச்சி கோட்டை ஸ்டேஷன் ரோடு கபூர் பள்ளிவாசல் மைதானம்,மதுரை ரோடு ஆலம் பாதுஷா பெரிய பள்ளிவாசல், ஜான் மஸ்தான் தர்கா பள்ளிவாசல், காஜாமலை பள்ளிவாசல், கீழப்புலிவார்டு ரோடு இலா ஜூம்மா பள்ளிவாசல், சவுக் முகம்மதிய மஸ்ஜீது, உறையூர் பாக்குப்பேட்டை குலாம் அலிக்கான் குளத்து பள்ளிவாசல், பாலக்கரை நானா மூனா பள்ளிவாசல் உள்ளிட்ட திருச்சி நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சபீர் அலி தலைமை தாங்கி பேசினார். சிறப்பு தொழுகையில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தொழுகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்ட தலைவர் சமயபுரம் உமர், செயலாளர் தர்கா காஜா, பொருளாளர் கனி, துணை தலைவர் பிலால், துணை செயலாளர்கள் லால் பாஷா, சம்சுதீன், இக்பால், அன்சர், சர்புதீன் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமுமுக
இதே போன்று திருச்சியில் தமுமுக வின் சார்பில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா பள்ளி வளாகத்தில் காலை 7 மணியளவில் நடைபெற்றது. தொழுகையில்
மாவட்ட தலைவர்கள் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் அ .பைஸ் அகமது, முகமது ராஜா தமுமுக மாவட்ட செயலாளார்கள் இப்ராகிம்ஷா இலியாஸ் மமக செயலாளார்கள் இப்ராகிம் அஸ்ரப் அலி பொருளாளர் காஜா மெய்தீன் ஹூமாயூன் கபீர் மற்றும்இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் முகமது ரபீக், ஐ.டி. பிரிவு மாநில துணை செயலாளர் நஜீர் தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர் மற்றும்
மாவட்ட நிர்வாகளின் குடும்பத்தினர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தொழுகை முடிந்த பிறகு முஸ்லிம் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.