“உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” பெரும் வரவேற்பை பெற்றுள்ளது : துரை வைகோ எம்.பி
திருச்சி, செப்.25 உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று திருச்சி எம்.பி. துரை வைகோ கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , பொதுமக்களுக்கு தேவையான அரசின் அனைத்து சேவைகளையும் விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத் தன்மையோடும் அவர்களது இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தைத் தொடங்கி நடைமுறைபடுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் கீழ், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் (செப்.23) நடைபெற்ற முகாம்களை நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.
இத்திட்டம், வருவாய், சமூகநலம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
அதன்படி, திருச்சி மாநகராட்சி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர், சோழமாதேவி மற்றும் பனையக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் இம்முகாம்கள் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி-யுடன் வேங்கூர் முகாமிற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகரக் கழகச் செயலாளரும் மண்டலக் குழுத் தலைவருமான மு. மதிவாணனுடன் சங்கிலியாண்டபுரம் முகாமிற்கும் சென்று, பொதுமக்களைச் சந்தித்தேன்.
அப்போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தேன்.
நானே நேரடியாக மக்களிடமிருந்து சில மனுக்களைப் பெற்று, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அவற்றிற்கு தீர்வு கிடைப்பதை உறுதி செய்தேன். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதை நேரில் கண்டேன். மக்களின் பிரச்சனைகளை அவர்களது பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, விரைவாகவும் உரிய முறையிலும் தீர்வு காணும் இத்திட்டம், மக்கள் சேவையில் மிக முக்கியமான பங்காற்றி வருகிறது. இத்தகைய மகத்தான முயற்சியைக் கண்டு மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர் அண்ணன் வெல்லமண்டி இரா. சோமு, சகோதரர் மணவை தமிழ் மாணிக்கம், சகோதரர் டி.டி.சி. சேரன் ஆகியோர் உடன் சென்றனர்.