திருச்சியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
திருச்சி, ஜன. 16 திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு, சிறப்பாக அறிவியல் கண்காட்சியை வடிவமைத்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளி அளவில் 8 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு அதன் வெற்றியாளர்கள் வருவாய் மாவட்ட அளவில் பங்கு பெற்று தனிநபர், குழு மற்றும் ஆசிரியர் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற போட்டியாளர்கள் திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று காட்சி பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.
இக்கண்காட்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுசூழல் அறிவியல், பொறியியல், உயிரியல்/உயிர் வேதியியல் மற்றும் கணினி அறிவியல் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் என 450க்கும் மேற்பட்டோர் திருச்சி நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்கின்றனர். இதில் தனிபட்ட வகை (ஒரு மாணவர், ஒரு ஆசிரியர்), குழு வகை (இரண்டு மாணவர்கள், ஒரு ஆசிரியர்), ஆசிரியர் வகை (ஒரு ஆசிரியர்) என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கண்காட்சிகள் நடைபெற்றது.
இதில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ரோபோக்கள் மூலம் எளிமையாக விதைகளை விதைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், மழை காலங்களில் தானாக துணிகளை காய வைக்கும் ஆடோமெட்டிக் ரெயின் கவர் கிளாத் ப்ரொடக்சன் வத்து லேசர் லைட் சென்சார் என்ற இயந்திரம், பயிர்கள் வெள்ளத்தை தாங்கும் வகையில் மரபனு மூலம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும், ஃபிங்கர் பிரின்ட் மூலம் வாகனத்தை ஆன் செய்யும் தொழில்நுட்பம், செவிதிறன் குறைப்பாடு உள்ளவர்களுக்கு சென்சார் மூலம் இசையை கேட்க செய்யும் தொழில்நுட்பம், நவின தொழில்நுட்பத்தின் நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் தொழில்நுட்பம் என பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இக்கண்காட்சியில் காட்சி பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.
மாநில அளவில் நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கேற்றவர்களில் தனிபட்ட வகை கண்காட்சிகள், குழு வகை (10 கண்காட்சிகள்), ஆசிரியர் வகை (10 கண்காட்சிகள்) என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்கள் காட்சிப்பொருட்களுடன் வரும் ஜன.21 முதல் 25 ஆம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெறும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளால் பள்ளிகளில் மாணவர்கள் புத்தக அறிவு மட்டும் இன்றி படைப்பாற்றல், செயல் திட்டம், கண்டுபிடிப்பு போன்ற திறன்கள் வளர்க்கப்படுகிறது. இந்த கண்காட்சி நிகழ்வுகள் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது .இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதன் மூலம் எதிர்கால விஞ்ஞானிகள் இன்றே உருவாகிறார்கள். சமுதாயத்தின் புதிய தேவைகள், புதிய பிரச்சனைகளுக்கு மாற்று தீர்வு இதனால் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மனதில் விதையாக இருக்கும் என்பதே இக்கண்காட்சியின் நோக்கமாகும்.. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மண்டல தலைவர் மதிவாணன், இணை இயக்குநர் (நாட்டு நலப்பணி திட்டம்) கா.சசிகலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.