திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டையில் சூரசம்ஹார விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிவன் கோயிலில் முகூர்த்த கல் நடுதல், மதுரை வீரன் சுவாமி கோயிலில் பூஜை செய்து சிவாலயம் வருதல், சிவாலயத்தில் முருக படை வீரர்களுக்கு கங்கணம் கட்டுதல் மற்றும் சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். முன்னதாக முருகப்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சக்திவேலை அம்பிகையிடம் பெற்றுக் கொண்ட முருகப்பெருமான் பொதுமக்கள் மத்தியில் எழுந்தருளினார். அப்போது
யானைமுகசூரன், சிங்கமுகன், தாரகாசுரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தேவர் படையும் அசுரப்படையும் போரில் ஈடுபட்டது. பக்தர்கள் முருகப்பெருமானை துதித்து விருத்தம் பாடல் பாடினர். அசுர வதம் நிகழ்ச்சிக்கு பின்னர் சிவாலயத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இன்று காலை ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சூரசம்ஹார விழா ஏற்பாடுகளை செங்குந்தர் மாரியம்மன் கோயில் பரிபாலன சபை, செங்குந்தர் மகாஜன சங்கம், செங்குந்தர் இளைஞர் அணி ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கண்டு களித்தனர்
