சமூகநலப்பணிகள் செய்பவர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்: சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா பேட்டி
திருச்சி, ஆக. 24 சமூகம் சார்ந்த நலப் பணிகளை செய்பவர்களை தமிழக அரசு கௌரவப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும் – சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா பேட்டி
திருச்சியில் பண்ணை நிலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவன நிகழ்விற்கு வருகை தந்த சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா ரிப்பன் வெட்டி பண்ணை நில வளாகத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு கூடி இருந்த பொதுமக்களிடம் உரையாற்றிய அறந்தாங்கி நிஷா, அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஜெய்லர் 2 திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை இயக்குநர் நெல்சன் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்னை அழைக்கவில்லை என்றார். தற்போது இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் ஒரு திரைப்படமும், இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறேன் என்றார்.
நிறைய பேர் என்னிடம் நல்ல நகைச்சுவை கதாபாத்திரம் உள்ளது எனக் கூறுவார்கள் ஆனால் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் வரும் படியான காட்சி அமைப்புகளே இருக்கும், அதுபோல் அல்லாமல் ஒரு திரைப்படத்தின் பாதி நேரமாவது நான் நடிக்கும்படியான கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பதற்கு பலர் ஒப்புக் கொள்வார்கள் ஆனால் நகைச்சுவை நடிகையை கதாநாயகியாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
நான் நிறைய பேருக்கு உதவிகள் செய்வது என் வீட்டில் என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்தது. மக்கள் கொடுத்ததை நாம் திரும்ப அவர்களுக்கே கொடுக்கிறேன் அரசியலில் இருந்து தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
இது போன்ற சமூகம் சார்ந்த சில விஷயங்கள் செய்பவர்களை அங்கீகரித்து தமிழக அரசு எங்களை கௌரவப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
தற்போது புதிதாக நிறைய கதாநாயகிகள் வந்த நிலையிலும் நீங்கள் இன்னும் சின்னத்திரை நயன்தாரா என்றே அழைக்கப்படுகிறீர்களே என கேட்ட போது….. பலர் அப்படி என்னை அழைக்கும் போது எனக்கே கஷ்டமாக தான் இருக்கும் நான் சின்னத்திரை அறந்தாங்கி நிஷாவாகவே இருந்து விட்டுப் போகிறேன் என்றார். இவை அனைத்தும் நகைச்சுவைக்காக சொல்வது மட்டுமே என்றார்.