“2005-ல கோவில் கலசத்தையே தண்ணீர் மூழ்கி சென்றது” – 15 வருடங்களுக்கு பிறகு குழுமாயி கோயிலில் வெள்ளப்பெருக்கு!
இறைவன் ஒருவனே என்றாலும் பல்வேறு உருவம் கொண்டிருப்பதும் உயிர்களின் நன்மைக்காகவே. அதுபோலவே அன்னை ஒருத்தியே என்றாலும் அவளது உருவத்தை நாம் பல கோணங்களில் காண்பதே இயற்கை. அப்படிப்பட்ட அன்னையின் திருவுருவில் இருப்பவள்…

சலசலத்து ஓடும் ஆறு….சத்தம் இல்லாத ஒரு இடம்…. இயற்கை எழில் கொஞ்சும் பகுதி… பாறையின் மீது கோவில்… பக்தர்கள் பரவசம்… என தன்னை நாடி வந்தோருக்கும், ஒவ்வொரு குடும்பத்திலும் காவல் தெய்வமாய் இருப்பவள்… காவிரியின் கிளை ஆறான உய்யக்கொண்டான் கால்வாயில் வீற்றிருப்பவள்… ஆம், அருள்மிகு குழுமாயி அம்மன்!!
உய்யக்கொண்டானின் மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்த குழுமாயி அம்மன் கோவில். திருச்சியை அடுத்துள்ள புத்தூர் சோழனூர் பகுதிக்கு மையமாகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இறையருள் வழங்கும் திருக்கோவிலாகவும், அமைதிச் சூழலில் அருளைப் பொழியும் புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது.

சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்த காலகட்டம் அது… அப்போதைய காவல் தெய்வமாய் வீற்றவள் தான் இந்த குழுமாயி அம்மன்! இன்றளவும் திருச்சியில் உள்ள பொதுமக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.
பாறைகளின் மேலே தான் கோவில் அமைந்து உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த கோவில் இது. அக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் இக்கோவில் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை விளக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை உய்யக்கொண்டான் வாய்க்காலை அமைந்திருக்கும் குழுமாயி அம்மன் கோவில் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது. கரூர், திருச்சி மாவட்டம் முசிறி போன்ற பகுதிகளில் பெய்த கனமழையின் தாக்கம் காரணமாக உய்யகொண்டான் வாய்க்காலில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் அப்பகுதியில் அமைந்திருக்கும் குமரன் நகர், வயலூர் ரோடு உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

இதுகுறித்து கோவில் பூசாரி சங்கரிடம் பேசினோம்…. “நாங்கள் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலில் பணியாற்றி வருகிறோம். என் அப்பாவிற்கு பிறகு நான் இப்போது இருபது வருடமாக இக்கோவிலில் இருக்கிறேன். நான் வெளியில் டிரைவர் வேலை தான் செய்து வந்தேன். மனதார சாமிக்கு செய்ய வேண்டும், என்பதால்தான் நான் கோவிலுக்கு வந்தேன்.
நன்றாக ஞாபகம் இருக்கிறது, 2005 ஆம் ஆண்டில் கோவில் கலசத்தையே தண்ணீர் மூடி சென்றது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோவில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. அந்த நிகழ்வை எங்களால் இன்னும் மறக்க முடியாது. தற்போது 2005-ஆம் ஆண்டிற்கு பிறகு 15 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் இந்த கோவிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் தற்போது கோவிலை மூடியுள்ளோம்” என்றார்
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA