திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

0 246
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25  திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை, எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது. எங்கள் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது – என்று  அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்தார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக BLA2 பாக நிலை முகவர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த BLA2 பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பா.ஜ.கவினர் வாக்கு இயந்திரத்திலும் மோசடி செய்ய கூடிய வகையில் வந்து விட்டார்கள் என ராகுல் காந்தி கூறி வருகிறார். அந்த மோசடி செய்வதை நாம் முறியடிக்க வேண்டும். நம்மை தேர்தல் களத்திற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதய சூரியனாக இருக்கட்டும் என்றார்

அடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலேயே  திமுக தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த மக்கள் கலைஞரை ஆதரித்து திமுக வை அந்த தொகுதிகளில் வெற்றி பெற செய்தனர். முதலமைச்சர் கூட்டணியை அன்போடு அரவணைத்து சிறப்பாக வழி நடத்தி செல்கிறார்.

எதிரே சேர்ந்துள்ள கூட்டணியை பொருத்தவரை அமித்ஷா முதலில் தனி அமைச்சரவை என கூறி விட்டு மதுரைக்கு வந்த போது கூட்டணி ஆட்சி என்கிறார். இதனால் தொண்டர்கள் சோர்வடைந்து விட்டனர்.

நம்முடைய கூட்டணி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் கூட்டணியாக உள்ளது. ஆனால் அதிமுக – பா.ஜ.க கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நம் கூட்டணி கடந்த தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் தேர்தல் பணியாற்றி வெற்றிப்பெறுவோம்.

முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் அந்த மாநாட்டில் பெரியார் -அண்ணா இழிவுபடுத்தப்பட்டார்கள் அதை பார்த்து திமுக கொந்தளித்த பிறகு அதிமுகவினர் கண்டன அறிக்கை விட்டார்கள். இந்த நிலையில் தான் அதிமுகவினர் இருக்கிறார்கள். நாம் சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

அதிமுக அரசு பத்தாண்டுகளில் நிதி நிலைமையை சீரழித்து விட்டது.
அதனால் திமுகவினருக்கு வேலை வாய்ப்பு முதலியவற்றை கொடுப்பதில் சில சிக்கல்கள் இருந்து வருகிறது. அப்படியே ஏதாவது வேலை வாய்ப்பு கொடுத்தாலும் அதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் செல்கிறார்கள். தொண்டர்களை புரிந்து கொண்ட தலைவராக முதலமைச்சர் உள்ளார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபின் தொண்டர்களுக்கு தேவையானதை முதலமைச்சர் செய்வார். திமுக வில் ஏற்கனவே படிவங்கள் வழங்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்ப்பார்கள் தற்போது செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொகுதியில் வாக்காளர்களில் 30 சதவீத உறுப்பினர்களை சேர்த்தால் எந்த கொம்பனாலும் நம் வெற்றியை தடுக்க முடியாது. அந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, திமுகவில் உறுப்பினர்களை சேர்ப்பது, தேர்தல் பணியாற்றுவது குறித்து பாக நிலை முகவர்களுக்கு எடுத்து கூறினோம். அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் பஞ்சபூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

அதிமுக பாஜக வுடன் கூட்டணி சேர்ந்ததை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லை, எங்கும் புகை வரவில்லை. எங்கள் கூட்டணி சுமூகமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை இருந்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்.
பவன் கல்யாண் ஆந்திராவில் நிலவும் பிரச்சனைகளை பார்க்கட்டும். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து கருத்து கூற வேண்டாம் மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேச கூடாது என்று  கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.