வேப்பிலை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருச்சி, ஏப். 15 மணப்பாறையில் சித்திரைத் திருநாளில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை. ஆயிரக்கணக்கான பெண்கள் விளக்கேற்றினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் நூற்றாண்டு பழைமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக சித்திரை முதல் நாள் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் சித்திரை முதல் நாளான இன்று திருவிளக்குபூஜை நடைபெற்றது.
முன்னதாக கோவில் பரம்பரை அறங்காவலர் வீரமணி தலைமையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். உலக நன்மைக்காகவும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவும், விவசாயம் செழித்திட, பருவ மழை தவறாது பெய்திட வேண்டியும் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி, மாலை 3 மணி, 5 மணி, இரவு 7 மணி என 5 பிரிவாக நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.