“ஸ்ரீரங்கம் தீபு பட்டர் மாடு வருது பா… அந்த சந்தோசம் போதுங்க” – ஸ்ரீரங்கத்தில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் ஐயரின் கதை இது!

0 987
Stalin trichy visit

“ஏய் யப்பா மாட்டை பிடிக்கிறவங்களுக்கு ஒரு சைக்கிளு… மாடு சுத்துனா மேக்கொண்டு பரிசுப்பா… பிடிக்கிறவங்க புடிச்சிக்கங்க….”
‘’ஒரு வெள்ளிக்காசுபா… ‘’போட்டி சூப்ரிம் கோர்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்குது. அந்த 31-வது நம்பரும் 11-வது நம்பரும் ரெட் கார்ட் ரெண்டு பேரையும் வெளியேத்துங்க…’’ “மாடு புடி மாடு பா” “எப்ப மாட்டுக்காரன் வந்து பரிசா வாங்கிக்க…” என்ற வார்த்தை எல்லாம் கேட்கும்போதே உள்ளுக்குள் ஒரு உணர்வு பொங்கி வரும். ஆம் ஜல்லிக்கட்டு தான்!

“தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. “வாடி வாசல் திறக்கும் வரை வீடு வாசல் போக மாட்டோம்” என கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக ஒரு போராட்டத்தை களத்தில் நின்று இளம் காளையர்கள் நடத்தினார்கள் என்றால் அது தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கவும், காளைகளுக்காகவும் நடத்தப்பட்ட உணர்வு பொங்கிய ஒரு போராட்டம்.

இந்த போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட எத்தனையோ பேர் அதன்பிறகு களத்திற்கும், ஜல்லிக்கட்டு மீது ஆர்வமாகியும் காளை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியே அந்தப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு தற்போது 8 காளைகளையும், நாட்டு மாடுகளையும் வளர்த்து வரும் ஸ்ரீரங்கம் ஐயர் பற்றிய தொகுப்பு தான் இது!


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தெற்கு உத்திர வீதி பகுதியை சேர்ந்தவர் ராகவன் என்கிற தீபு(32). ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் பட்டராக இருந்துவருகிறார். இவர் தான் தன்னுடைய வீட்டில் காளைகளை பிள்ளையாக வளர்த்து வருபவர். எத்தனையோ விமர்சனங்களை கடந்தும் கலாச்சாரத்தை காப்பதற்காகவும், நாட்டு மாடுகளை காப்பதற்காகவும் அவர் களத்தில் இறங்கிய கதையும், காளை வளர்ப்பில் எவ்வாறு ஆர்வம் வந்தது என ஸ்ரீரங்கம் ஐயர் தீபுவிடம் பேசினோம்…. “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது திருச்சியில் ஒரு பத்து நாட்கள் கலந்து கொண்டேன். அதன் பிறகுதான் எனக்குள்ளே ஒரு மாறுதல் ஏற்பட்டது. எனக்கும் ஜல்லிக்கட்டு காளைகள் வாங்கி வளர்க்க வேண்டும் என்ற ஆசை அப்போதிலிருந்து தோன்றியது. அதன்பிறகு ஒரு நாட்டு மாடு வாங்கினோம். பிறகு படிப்படியாக தற்போது 8 ஜல்லிக்கட்டு காளைகள் எங்களிடம் உள்ளது. என்ன ஒரு பிராமணன் போய் மாடு வளர்க்கிறாய்? ஐயர் போய் மாடு வளர்க்கிறாய்? என்று நிறைய பேர் என்னிடம் கேட்டுள்ளனர். ஏன் ஐயர் மாடு வளர்க்க கூடாதா?… பாரம்பரியத்தை யார் வேண்டுமானாலும் காக்கலாம்.


எங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பால் நான் தற்போது மாடுகளைப் பராமரித்து வருகிறேன். என்னுடைய மாடுகள் நிறைய இடங்களில் சைக்கிள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், கட்டில் என அத்தனை பரிசுகளும் வாங்கியுள்ளது. அதனை எதுவுமே நாங்கள் இதுவரை கொட்டகைக்கு எடுத்து வந்ததில்லை. இடையில் யார் கேட்கிறார்களோ அவரிடமே கொடுத்து விடுவோம்… தற்போது 8 காளைகள் இருக்கிறது. இந்த 8 காளைகளை, 18 மாறாகவும் 32 ஆக மாறவும், அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை தான் உள்ளது. “ஒரே தட்டில் சாப்பிடுவது மட்டும் தான் நாங்க செய்யல…அதையும் இனிவரும் நாட்களில் நாங்க சாப்பிடுவோம். பெருசு, கருப்பு, மட்ட, பிகிலு என பேர் சொல்லிதான் கூப்பிடுவோம். எங்க வீட்டில ஒரு புள்ளை மாதிரி தான் இந்த காளைகளை நாங்க வளர்த்து வரோம்.

காளை ஜல்லிக்கட்டு போயிட்டு வந்ததிற்கு அப்புறம், எங்க அம்மாதான் மாட்டுக்கு சூடம், கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுப்பார்கள். அப்பாவும் கோயில் பட்டராதான் இருக்காரு. அவரு அப்பப்போ மாடுகள் எப்படி இருக்கு, என்ன பண்ற, அப்படிங்கற மாதிரி அவருக்குமே ஒரு ஆர்வம் தற்போது வந்துவிட்டது. மாடுகளை நாங்க வளர்த்து வரோம் ஆனா, வெளியில ஜல்லிக்கட்டுக்கு கூட்டிபோறது எல்லாமே இந்த ஸ்ரீரங்கத்தில் ரஞ்சித் நினைவு குழு பசங்க தான் அவ்வளவு ஆர்வமாக மாட்டை வண்டியில் ஏற்றியது முதல் வீட்டுல வந்து இறங்குவது வரை எல்லா வேலையும் பாப்பாங்க….


இப்ப நடக்கிற ஜல்லிக்கட்டுக்குள்ள அரசியல் வந்துடுச்சு. அரசியல்வாதிகள், பணபலம் படைத்தவர்கள் மாட்டை மட்டும் முன்னாடி அனுபுராங்க… ஆனா எங்கள மாதிரி ஆளுங்க டோக்கன் கிடைக்கிரதுல கூட அவ்வளவு கஷ்டமா இருக்கு… ‌‌இந்த மாடு புடிக்குறவங்களுக்கு இன்சூரன்ஸ் வசதி மற்ற இந்த குறைகள் எல்லாம் தமிழக அரசு நிவர்த்தி பண்ணனும்.

“எவ்வளவு தடைகள் இருந்தாலும் வாடிவாசல் வரும்போது ஸ்ரீரங்கம் தீபு பட்டர் மாடு வருதுப்பா…அப்படின்னு சொல்லும் போது… வர சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. அந்த ஒரு சந்தோசம் போதும். நான் தொடர்ந்து மாடுகளை வளர்த்து வருவேன் என்றார் புன்னகையுடன்….

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.