திருச்சியில் ரயில் விபத்து மீட்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை
திருச்சி, ஆக.21 ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது
இந்தியாவின் மிகப்பெரிய துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்களுடைய பயணத்திற்காக ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீப காலமாக அவ்வப்போது ரயில் விபத்துக்கள் ஏற்படுகிறது. ரயில் விபத்துகளின் போது உடனடியாக மீட்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது இதனிடைய ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக எப்படி மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி ரெயில்வே குட்செட் யார்டில் இன்று நடைபெற்றது.
ரயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கை குறித்து பாதுகாப்புக் குழுவினர் செயல்விளக்கம் நடத்தி காட்டினர்.
இதற்காக ஒரு ஏசி ,ஒரு படுக்கை வசதி பெட்டி(Sleeper class) மற்றும் பொது ரயில் பெட்டிகள் கவிழ்க்கப்பட்டும் ஒரு பெட்டியின் மீது மற்றொரு ரயில் பெட்டி ஏற்றப்பட்டது.
இதை விபத்தாகக் கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.
உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேன் உள்ளிட்டவை குட் ஷெட்டு யார்டுக்கு கொண்டுவரப்பட்டது.
ரயில்வே துறையினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர், தொழில்நுட்ப துறையினர், காவல் துறையினர் என 250க்கும் மேற்பட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்பது, உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து ஒத்திகை
தத்துரூபமாக செய்து காட்டப்பட்டது.
ரயில் விபத்து நடைபெறும் இடத்தை போலவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது.
ரயில் பெட்டிக்குள் சிக்கி இருப்பவர்களை துளையிட்டும் கயிறு மூலமாகவும் மீட்பது போல ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்த ரயில் விபத்தில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தது போலவும், 18 பேருக்கு பலத்த காயமும் 18 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது போல செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் லேசான காயமடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சையும் பலத்த காயமடைந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டது போல ஒத்திகை நடந்தது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலகிராம் நிதி மற்றும் முதன்மை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி லலித் முன்னிலையிலும் நடத்தப்பட்டது.