நெல் பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க பயிற்சி
திருவாசியில் நீர் வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க பயிற்சி நடைப்பெற்றது.
திருச்சி, ஜன.4 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் தமிழ்நாடு நீர் வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க பயிற்சி நடைப்பெற்றது.
நெல் பயிரில் உற்பத்தி திறனை அதிகரிக்க வழிமுறைகளை கூர்ந்து ஆராயும் போது நெல் பயிரை தாக்கும் பூச்சிகள், நோய்கள், களைகள், எலிகள் மற்றும் தானிய சேமிப்பில் ஏற்படக்கூடிய இழப்பு முக்கியமானவைகளாக கருதப்படுகிறது.
இக்காரணங்களைக் கருத்தில் கொண்டு விஞ்ஞான அடிப்படையில் நவீனத் தொழில்நுட்ப முறைகளை கையாண்டு, சுற்றுப்புறச்சூழல் கெடாமல், பூச்சி நோய்களின் தாக்குதல்களை குறைத்திட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்தை விவசாயிகள் மத்தியில் பரவச் செய்ய தமிழ் நாடு நீர் வள நிலவள திட்டத்தின் கீழ் திருவாசி கிராமத்தில் நெல் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி தலைமை ஏற்று திட்ட விளக்க உரை ஆற்றினார். குமுளூர் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் சிவரஞ்சனி நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும், பயிர் பாதுகாப்பு குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.