பணியில் அலட்சியமாக இருந்த பள்ளித் தலைமையாசிரியர் பணியிட மாற்றம் : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

0 263
Stalin trichy visit

திருச்சி, ஆக. 22  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
இதில் குறிப்பாக இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காக்கும் – நம்மைக் காக்கும் புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்,கலைஞர் மகளிர் உரிமை திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் கடைக்கோடியில் வாழக்கூடிய மக்களிடமும் சென்றடை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி நேற்று மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களை உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வில் ஈடுபட்டார்.

ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளி புதிய வகுப்பறை திறந்து வைத்து அதனைத்தொடர்ந்து புதிய அறிவுசார் மையம், புதிய மின் மயான கூடம், வேளாண் துறை அலுவலகம், உழவர் சந்தை, உணவுப்பொருள் சேமிப்பு மற்றும் பதப்படுத்துதல் கிடங்கு உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து திருநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு வகுப்பறையில் மாவட்ட ஆட்சியர் சென்று பார்வையிட்டார்.
அப்போது 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரே வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். அந்த வகுப்பறையில் சாக்பீஷால் போடப்பட்டிருந்த ஒரு வட்டத்தில் 1 மாணவி 2 மாணவர்கள் என மூன்றுபேர் அமர்ந்திருந்த தை கண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து ஆசிரியையிடம் ஏன் இங்கு அமர வைத்திருக்கிறீர்கள் என்ற கேட்டார்.

அப்போது வகுப்பு வாரியாக தனித்தனியாக அமர வைத்துள்ளேன் என ஆசிரியை கூறவே இதுபோன்று அமர வைக்க கூடாது ஒன்றாக அமர வைக்க வேண்டும் பாடம் நடத்தும்போதும் மட்டும் தனியாக அமர வைத்து பாடம் நடத்துங்கள் வகுப்பு ஆசிரியையை மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். தொடர்ந்து மாணவர்களிடையே கலந்துரையாடி அவர் பள்ளி தலைமை ஆசிரியை கீதாவிடம் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு மாணவர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது சென்ற வருடத்தை விட இந்த வருடம் 43 மாணவர்கள் வருகை குறைந்துள்ளதும் தலைமை ஆசிரியை அதை பொருட்படுத்தாமல் அலட்சியமாக பணியாற்றி வந்ததும் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்தது. மேலும் 20 வருடமாக இதே பள்ளியில் தலைமை ஆசிரியை பணியாற்றி வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி தலைமை ஆசிரியை கீதாவை பணியிட மாற்றம்  செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து மதியம் 2 மணியளவில் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் 420 மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்களின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தினார். பின்பு அரசு துறை உயர் அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு குறித்து கேட்டறிந்தார்கள்.

முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உடனடி தீர்வாக வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் சுயஉதவிக்குழு உள்ளிட்ட துறைகளின் சார்பில் 75 பயனாளிகளுக்கு பட்டா. காதொலிக்கருவிகள், சக்கரநாற்காலி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்,மகளிர் திட்டம் திட்ட இயக்குநர், லால்குடி வருவாய் கோட்டாட்சியர், தனித்துணை ஆட்சியர், உள்ளிட்ட அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் வருவாய் துறையினர் செய்திருந்தனர்.

தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டத்தில் இரவு தங்கியிருந்து இன்று (22.8.2024) காலை 06.00 மணியளவில் மண்ணச்சநல்லூர் பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் பணியின் செயல்பாடுகளையும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.