பால், தண்ணீர், உணவு என தனது சொந்த செலவில் கடந்த 5 தினங்களாக வழங்கி அசத்தும் திருச்சி உதவி ஆய்வாளர்!
மழை, புயல், வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி உதவும் சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் என மனிதனுக்கு மனிதன் தான் உதவ வேண்டும் என்கிற விதமாக பலர் தற்போது பெய்து வரும் கனமழையிலும் களத்தில் நின்று சேவையாற்றி வருகின்றனர்.

“மனிதம்” இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ஏற்றவாறு திருச்சி காவலரின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் மோகன்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 மற்றும் 5 தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் வீடுகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக உய்யகொண்டான் வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், கோரை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உறையூர் பகுதி முற்றிலும் மழைநீர் சூழ்ந்தது. உறையூர், குமரன் நகர், வயலூர் ரோடு என அத்தனை பகுதிகளிலும் மழை நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய நிம்மதியான இரவை கழித்து 4 மற்றும் 5 நாட்கள் ஆகிறது என்று தான் கூற வேண்டும். வீடுகளில் மழைநீர் புகுந்து தெருக்களில் தஞ்சம் புகுந்த பலருக்கு உறையூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகனின் செயல் வியக்க வைத்துள்ளது.
இவர் தன்னுடைய சொந்த செலவில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளான உறையூர் குழுமணி ரோடு சீதாலக்ஷ்மி நகர் ராஜலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் பால், தண்ணீர், உணவு என அத்தியாவசிய பொருட்களை கடந்த ஐந்து தினங்களாக தினந்தோறும் பொதுமக்களுக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
காவலரின் இத்தகைய செயலுக்கு பொதுமக்கள் மற்றும் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8