வ.உ.சிதம்பரனாரின் சித்தாந்தம் தேவையான ஒன்றாக இருக்கிறது : ஹெச்.ராஜா பேட்டி
திருச்சி, செப். 5 பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
வ.உ.சிதம்பரனாரின் சித்தாந்தம் இன்று தேவையான ஒன்றாக இருக்கிறது. உலகத்திலேயே அமெரிக்கா மிக அதிகமான வரி விதித்திருப்பது பாரத தேசத்திற்கு தான். இது மிகவும் அதீதமானது தேவையில்லாதது என்று உலகமே ஒப்புக்கொள்கிறது. 50 சதவீதம் வரிவிதிப்பு நியாயமற்றது என்று அமெரிக்க நீதிமன்றமும் தீர்ப்பளித்து இருக்கிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி ஏழேகால் சதவீதம். பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதனை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவிலிருந்து விவசாய விளை பொருட்கள், பால் பொருட்கள், கடல் உணவுகள் மற்றும் ஜவுளி ரகங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. அதிகம் ஏற்றுமதி செய்யாத 40 நாடுகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அது தவிர பிரதமரும் நிதி அமைச்சரும் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதாகவும் உறுதியளித்து வருகின்றனர் .
ஜி எஸ் டி யில் நான்கு விதமான வரி விதிப்பு முறை இருந்ததை மாற்றி இரண்டு விதமான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளனர். பல உணவுப் பொருட்களுக்கு வரியே இல்லை. முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் நொறுங்குகின்ற பொருளாதாரத்தில் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவை குறிப்பிட்டு இருந்தார். வரி விதிப்பின் போது, துவக்கத்தில் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. இந்தியா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடாக மட்டுமின்றி 140 கோடி மக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட நாடு. நுகர்வு அதிகரிக்க வேண்டும் என்றால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் இருக்க வேண்டும். அதற்காகவே வரி விதிப்பு முறையை 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு விதமான நிலைக்கு மாற்றி உள்ளோம். இதன் மூலம் மக்கள் அதிகமான பொருட்களை வாங்குவதற்கும் உற்பத்தி அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும். தற்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பில் புரட்சிகரமான இரண்டாம் கட்ட நடைமுறை மேற்கொணடு உள்ளனர்.
அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி 60 மில்லியன் டாலராக இருந்த போதிலும், ஆன்லைனில் அமெரிக்காவின் பொருட்களை வாங்குவது 160 மில்லியன் டாலராக உள்ளது. வ உ சிதம்பரனாரின் பிறந்தநாளில், ஆன்லைனில் பொருட்களை வாங்க மாட்டோம். உள்நாட்டு தயாரிப்பு, சுதேசி பொருட்களை வாங்குவோம் என்று முடிவெடுப்போம்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கிறார் அவரது உணர்வு எனக்கு புரிகிறது. எப்போதும் ஒற்றுமையே பலம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று இருப்பது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி. தேசிய ஜனநாயக கூட்டணியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்துவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு, இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து. போதை பழக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வாக்காளரும் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். பலவீனப்படுத்துவது எதிர்கால சந்ததிக்கு ஆபத்தாக முடியும். கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு சித்தாந்தமும் எங்கள் உழைப்பும் தான் காரணம். பக்கத்து வீட்டுக்காரன் பலவீனமானால் நான் பணக்காரன் என்பது போன்ற கண்ணோட்டம் பாரதிய ஜனதா கட்சியினர் யாருக்கும் இல்லை . கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம் பெற்று இருக்கிறது என்பது முக்கியமல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக பெற்ற ஓட்டுக்களை 24ம் ஆண்டு தேர்தலில் தக்க வைத்து கொள்ள முடியவில்லை ஏழு எட்டு சதவீதம் சரிந்திருக்கிறது. அதேபோல் இன்னும் ஒரு ஏழு எட்டு சதவீதம் சரிந்தால் முடிந்து போனது கதை. இவர் அவர் தெரிவித்தார்.