துறையூர் ஸ்ரீ பஞ்சமி வாராஹி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை பஞ்சமி
திருச்சி, அக்.9 திருச்சி மாவட்டம், துறையூர், புரட்டாசி மாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு துறையூர்-பெரம்பலூர் சாலையில் பெருமாள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரா பழனிமூட்டை சுவாமிகள் சித்தர் பீடத்தில் அருள்பாளிக்கும் ஸ்ரீ பஞ்சமி வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைப்பெற்றது. மாலை 05.30 மணிக்கு மூலவரான ஸ்ரீ பஞ்சமி வாராஹி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன.
மூலவரான ஸ்ரீ பஞ்சமி வாராஹி அம்மனுக்கு சீயக்காய் பொடி, மஞ்சள்தூள், பால், சந்தனம், இளநீர், பன்னீர், திரவியப்பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிர்தம், பழச்சாறு ஆகிய நெய்வேத்தியப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மாலைகள் அணிவித்து ஆரஞ்சு நிற பட்டுப்புடவை சார்த்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.
அலங்காரத்திற்கு பின்பு பலவகை மலர்களால் அம்மனுக்கு உண்டான மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்யப்பட்டது. உற்சவரான அம்மன் அலங்காரம் செய்து கோவிலை மூன்று முறை சுற்றி வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளினார்.
ஊஞ்சலுக்கு முன்பாக பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த வாழை இலையில் பச்சரிசி, வாழைப்பழம்,உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் நெய்விளக்கு, அச்சு வெல்லம், எலுமிச்சை பழம் போன்ற பொருட்கள் கொண்டு இறை வழிபாடு மேற்கொண்டனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பதினொரு முறை வராஹி அம்மனுக்கான பாடல் ஒலிக்கப்பட்டு வந்திருந்த அனைவராலும் பதினோரு முறை கோவில் வளாகத்தில் பாடப்பட்டது.
இறுதியாக இரவு 8.00 மணிக்கு தூண்டில் விளக்கு தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை,
ஒருமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்யவும் காண்பிக்கப்பட்டது.
புரட்டாசி மாதம் தேய்பிறை பஞ்சமி பூஜையில் துறையூர், காளிப்பட்டி, புத்தனாம்பட்டி, மதுராபுரி, பெரம்பலூர், திருச்சி, முத்தியம்பாளையம், நல்லியம்பாளையம், நடுவலூர், குன்னுப்பட்டி, புளியம்பட்டி, அடிவாரம், கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, ஆகிய இடங்களில் இருந்து பக்தர்கள் வருகைத் தந்து கலந்து கொண்டனர்.
வளர்பிறை பஞ்சமி விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் உணவுப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.